இனிமேல் பறவைகளை ரசிக்கலாம்: வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சீசன் காலத்தின்போது வெளிநாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டிவாயன், நாரைக்கொத்தி,  செந்நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பூநாரை உள்பட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொரித்து செல்கிறது. இங்குள்ள பறவைகளை பார்த்து ரசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசு எடுத்து நடவடிக்கை காரணமாக நோய் தொற்று பாதிப்பு குறைந்துவிட்டதால் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி பறவைகள் சரணாலயம் வனத்துறை அதிகாரிகளால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், ‘’வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது ஏராளமான பறவைகள் தங்கியுள்ளது. இவற்றை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும்வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பயணிகள் நடந்துகொள்ளவேண்டும். அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்றனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: