பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்!

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்!

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மாணவர்களில் இவரும் ஒருவர். 650 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்குரிய நெல் ஜெயராமன், மாநில, தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். ஆனால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. பின்பு, திருத்துறைப் பூண்டியில் தொழிலாளியாக வேலைச் செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003- இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைச் சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினார். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறு உற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் பின்புதான் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப் பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாகத் திகழ்கிறது.

ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும்.

பின்பு அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. நெல் திருவிழாவில் குறைந்தபட்சம் 4,500 பேர் பங்கேற்றனர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் பங்கேற்கின்றனர்.

புற்றுநோயால் அவதியுற்ற அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 06-12-2018 நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: