மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை, 2014 முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. இந்த விருது வழங்கும் நடைமுறையை, 2014ல், சென்னையில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தாண்டு முதல் ஆக.7, தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2018 ம் ஆண்டுக்கான சந்த் கபீர் விருதுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தேசிய அளவில் விருது பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த சந்த் கபீர் விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில் 2010ம் ஆண்டு தேசிய விருது பெற்ற கிருஷ்ணமூர்த்தி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரே சேலையில் 1000 புட்டா டிசைன் வடிவமைத்து, புதுமையாக சேலை நெய்ததன்மூலம் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
இதன்மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை, தங்கக்காசு, தாமிரப் பட்டயம், காஷ்மீர் சால்வை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, சரளா – கணபதி, காமாட்சி – வி.ஹரி தம்பதியர், ருக்மணி, ஏ.ஹரி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் ரொக்கம், 15 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன், தாமரை பத்திரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தேசிய அளவிலான சான்றிதழ் விருது திருக்காலிமேட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ், சீனிவாசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி : தினகரன்