முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 10ல் முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகளால் தான் தண்ணீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று விளக்கமளித்துள்ளார். ஊடகங்களில் வந்த தவறான செய்தி குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையை கண்காணிப்பதும், பராமரிப்பதும் தமிழக அரசு தான் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு விளக்க செய்தியை வெளியிட்டுள்ளார். பத்திரிக்கைகளில் முல்லை பெரியாறு அணை குறித்து வந்துள்ள தவறான செய்தி காரணமாக இந்த மறுப்பு செய்தி வெளியிடுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரை 1886ஆம் ஆண்டு அப்போதைய கேரள அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் அடிப்படையில் கட்டப்பட்டது. 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. இந்த அணையின் கட்டுப்பாடு யாரிடம் உள்ளது என்றும் இதன் அடிப்படையில் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதில் ஐயம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் வந்துள்ள செய்தியில் முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது உண்மைக்கு புறம்பானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அணைக்கு வரும் நீர், வைகை அணைக்கு எடுத்து செல்லும் நீர், பருவமழை அளவை கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்ற ஆணை படி 142 அடி வரை தேக்க தேவையான நடவடிக்கைகளை கண்காணித்து அரசு எடுத்து வருகிறது. இதில் கேரளத்தை சேர்ந்த ஒரு தனிநபர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிலும் கூட இந்த ஆணை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மாதவாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்டத்தின் அளவை தொடர்ந்து கண்காணித்து தான் நீர் திறக்கப்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தான் 28ஆம் தேதி காலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததின் காரணமாக 2 மதகுகள் திறக்கப்பட்டு மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்து அன்று காலையே நீர்வளத்துறை பொறியாளர்களால் திறந்துவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதலின் படி கேரள அரசின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் மதகுகள் திறக்கப்படும் போது கேரள அரசின் நீர்வளத்துறை அமைச்சரும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மைக்கு மாறாக கேரள அரசின் அதிகாரிகள் அணையை தானாகவே திறந்தார்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது மிக தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று நீர்மட்டத்தின் அளவு 138.85 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 3,400 கனஅடியாகவும், வைகை அணைக்கு எடுத்து செல்லக்கூடிய நீரின் அளவு 2,340 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 875 கனஅடியாக உள்ளது என்ற விளக்கத்தையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>