இரு மொழி கொள்கையை தவிர தமிழகத்தில், வேறு மொழியை திணிக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்!

இரு மொழி கொள்கையை தவிர தமிழகத்தில், வேறு மொழியை திணிக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தஞ்சையில் கூறியதாவது: இன்று தமிழகத்திற்கே உணவு வழங்கும் மண்ணாக தஞ்சை உள்ளது. அது போல சரசுவதி மகால் நூலகத்தை பொறுத்தவரை பழமை வாய்ந்தது மட்டும் அல்ல, உலகத்தில் சிறப்பு மிக்க முதலிடம் பெறும் நூலகமாக திகழ்ந்து வருகிறது. இங்கு பல்வேறு மொழிகளின் நூல்கள் இடம்பெற்று உள்ளது. இந்த நூலகத்திற்கு நிதியை ஜெயலலிதா ரூ.70 லட்சமாக உயர்த்தி தந்தார். இப்போது முதல்வர் ஒப்புதலோடு ரூ.1 கோடி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் 8 நூலகங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழடியில் உள்ள நமது தொன்மை வாய்ந்த தமிழர்களின் பண்பாடுகளை எடுத்துச்சொல்லும் வகையில் நூலகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் நிறைந்து வாழும் தஞ்சையில் அவர்களுக்காக நூலகம் திறக்கப்பட்டு உள்ளது.

அதே போல கோவையில் தொழிற்சாலைகளுக்கான நூலகம் திறக்கப்பட உள்ளது. மதுரையில் புராதானங்களை காக்கும் வகையில் நூலகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் அச்சு கோர்க்கும் வகையில் நூலகம் திறக்க நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இருமொழி கொள்கை (தமிழ், ஆங்கிலம்) தான் தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்று அண்ணா கூறினார். அதைத்தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். இருமொழி கொள்கையை தவிர வேறு மொழிகளை இங்கு திணிக்க கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரும், பிரதமரை சந்திக்கும் போது அதைத்தான் வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: