சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர். சமூகநீதிப் போராளிகளான அவர்களுடைய உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989 ஆம் ஆண்டு அமைந்த அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி. அது அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது.
ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; மீட்கப்படவேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலே, விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார்.