மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி தருவதோடு உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதால், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
`வாழும் கலை’ அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீஶ்ரீ ரவிஷங்கர் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இதற்காக பெரிய கோயில் உள் வளாகத்தில் தெற்கு திசையில் கோபுரத்துக்கு அருகிலேயே பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிகழ்ச்சியால் கோயிலுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது எனவும் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கூறினர். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் டெல்லியில் உள்ள தொல்லியல் துறை, வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீஶ்ரீ ரவிஷங்கருக்கு யோகா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதி குறித்து சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. ஒரு தனியார் நிகழ்ச்சி நடத்துவதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள். மேலும் 3,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ராட்சஸ ஜெனரேட்டர்களும் கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு ரூபாய் 3,000 வரை பணம் வசூல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதால் அந்தப் பணிகளும் பாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக தமிழகத்தில் உள்ள தொல்லியல் துறை அதிகாரிகளிடமும், தமிழக அரசிடமும் எந்த அனுமதியும் பெறவில்லை.
பணம் வசூல் செய்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் வேறு ஏதேனும் இடங்களில் நடத்தலாம். பெரும் கூட்டம் கூடும் இந்த நிகழ்ச்சியால் மக்களுக்கும், கோயிலுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கெனவே வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் யமுனை நதிக்கரையில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியபோது யமுனை நதிக்கரையை சேதப்படுத்தியதாகக் கூறி அந்த அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்ததாகத் தெரிகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு பெரிய கோயிலையும், மக்களையும் காக்கும் வகையில் அதற்கு அனுமதி வழங்காமல் தடை செய்ய வேண்டும்’’ என்றனர்.
இந்தநிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், “ஸ்ரீஸ்ரீரவிசங்கர் யமுனை ஆற்றங்கரையில் நடத்திய நிகழ்ச்சியில் நதியை மாசுபடுத்தியதாக 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர். இந்தநிலையில் புகழ்வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலிலும் நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், “புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவது ஏன்? அதற்கு வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாமே? கோயில்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அரங்குகள் அமைத்தது ஏன்? இந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் அப்புறப்படுத்தி தஞ்சை மாவட்ட நிர்வாகம் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.