மதுரையில் ‘கீழடி’ கண்காட்சி; அக். 31 ல் முதல்வர் திறக்கிறார்!

மதுரையில் ”கீழடி” கண்காட்சி அக். 31 ல் முதல்வர் திறக்கிறார்!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி அக்டோபர் 31ல் வீடியோகான்பரன்சிங் மூலம் திறக்கிறார்.

கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் நடத்திய நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் முடிவில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை அனைத்து தரப்பினரும் காணும் வகையில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மதுரை உலக தமிழ் சங்கத்தில் முதல் தளத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்ட கண்காட்சி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது :

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறும். அகழ்வாராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்டதில் மிக அரிய வகையிலான 600 பொருட்கள் இடம்பெறும். பெடன்ட் போன்ற டெரெகோட்டா ஆபரணங்கள், காட்டு பன்றி உருவம் கொண்ட ஆரஞ்ச் கார்லியன் ஸ்டோன், நான்கு இன்ச் உயரத்தில் மனித உருவம் கொண்ட மண் ஓடு, சிறிய மண் பானை போன்றவை இடம் பெறும். இதில் ஆரஞ்ச் கார்லியன் ஸ்டோன் தமிழகத்தில் கிடைக்காது. வடமாநிலங்களில் மட்டுமே காணப்படும். அந்த காலத்திலேயே வடக்கிற்கும், தெற்கிற்கும் வணிக தொடர்பு இருந்ததை இப்பொருள் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த கண்காட்சியியை பார்வையிடுவதன் மூலம் தொன்மையான காலத்திற்கு சென்ற உணர்வு ஏற்படும்.

ஜூலையில் அமெரிக்கா உலக தமிழ் கருத்தரங்கில் இடம்பெற்ற செங்கல் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறும். கண்காட்சி அரங்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். சுற்றுலாத்துறை மூலம், ஐந்து கைடுகள் பார்வையாளர்களுக்கு தொல்லியல் பொருட்களை விளக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். அதே எண்ணிக்கை கண்காட்சியை பார்க்க வர வாய்ப்புகள் உள்ளன. இக்கண்காட்சியை அக்., 31 ல் முதல்வர் பழனிசாமி வீடியோகான்பரன்சிங் மூலம் திறக்கிறார் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: