கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பரிசோதனை செய்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. அதன்பின் தமிழக தொல்லியல்துறை நான்காம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து ஐந்தாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.
இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு பலரது நிலங்களில் 27 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஐந்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வில் அதிக அளவில் சுவர்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. குழிகள் தார்ப்பாய் மூலம் மூடியிருந்தும் மழைநீர் புகுந்தது. இதில் சுவர்கள் சேதமடைந்தன, இதனால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது. இதை அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே குழிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.