கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தநிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளை விட மேலும் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
வைகை நதியின் தெற்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட ஆய்வுகளின்படி சங்ககாலம் என்பது 2,200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தரவுகள் கிடைத்தன. பல்வேறு இடையூறுகளைத் தாண்டி கீழடியில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 4-ம் கட்ட ஆய்வு முடிவுகள் குறித்த கையேட்டை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. கீழடியில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையில் 4ம் கட்ட அகழாய்வுப் பணிகள் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன.
சிந்து சமவெளி அகழாய்வின்போது கிடைத்த திமில் உடைய காளையின் எலும்புகள் கீழடி அகழாய்விலும் கிடைத்திருப்பதால், இரு நாகரிகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கீழடியில் கிடைத்த பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ஆய்வகங்களுக்கும் சோதனைக்காக அனுப்பப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள BETA நிறுவனத்தில் கார்பன் டேட்டிங் எனப்படும் கரிமப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கு கிடைத்த எலும்புத் துண்டுகள், புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
கீழடி அகழாய்வின்போது கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானைகள் கிடைத்தன. அதேபோல், திமில் உள்ள காளைகள், பசு, எருமை, ஆடு போன்றவைகளை வேளாண் பணிகளுக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்த்து வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து மற்றும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தி வீடுகள் கட்டுமானம் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கீழடியில் கிடைத்திருக்கின்றன.
சங்ககால தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்கு சான்றாக பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங்களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு முடிவுகள் வரலாற்றைத் திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறது. கேரளாவில் பட்டணம் என்ற ஒரு இடம் கண்டறியப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சேர மன்னனின் துறைமுக நகராக விளங்கிய முசிறிப்பட்டணம்தான் அது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உலக அளவில் அந்த ஆய்வு குறித்து பேசப்பட்டது. புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், நாமும் ஒரு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வு விரிவாக வீரியத்துடன் செய்ய வேண்டும்” என்றார்.
இந்தநிலையில், கீழடி ஆய்வு விவகாரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர், “தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என கீழடி 4ம் கட்ட ஆய்வில் தெரியவந்தது தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்க்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.