கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!

கீழடி 6-வது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “கீழடி அடுத்தகட்ட ஆய்வை தொடங்கும் தருணம் நெருங்கி வருகிறது.

இதற்காக சென்னையில் மூத்த பேராசிரியர் பிச்சை அப்பன், தலைமைச் செயலாளர் உதய சந்திரன் ஆகியோரை சந்தித்து கீழடியில் 6-ம் கட்ட ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கடந்த வாரம் வலியுறுத்தினோம். அதற்கு அவரும் இசைவு தெரிவித்திருந்தார்.

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மாநில தொல்லியல் துறையுடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு மாத காலத்தினுள் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட உள்ளோம்.

இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ரூசா (RUSA) அமைப்பில் இருந்து முதல்கட்டமாக ரூ. 1 கோடி நிதி ஒதுக்க உள்ளோம். இந்த ரூ.1 கோடி ஒதுக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். வெகு விரைவில் அனுமதி கிடைக்கும்.

மேலும், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில பொருட்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா எடுத்துச் சென்றுள்ளார். இதன் மூலம் கீழடியின் தொன்மை நாகரிகம், கலாச்சாரம் குறித்த ஹார்வார்டு பல்கலையின் முடிவுகள் வெகு விரைவாக அறிவிக்கப்படும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: