மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இதைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
5-ம் கட்ட அகழாய்வுப் பணி முடிவில் மொத்தம் 12,000-த்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. அந்தப் பொருள்கள் அனைத்தும் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நேற்று (19.2.2020) முதல் வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-ம் கட்ட அகழாய்வுப் பணி கதிரேசன் என்பவரது நிலத்திலும் கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த அகழாய்வில் 10 தொல்லியல் ஆய்வாளர்கள் உட்பட 270 பேர் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையில், `கீழடி தொடர்பான தொல்லியல் ஆய்வை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்குச் சிறப்புப் பேருந்து வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்’ என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.