1903:காமராஜர் விருதுபட்டி என்ற ஊரில் சிவகாமி அம்மையாருக்கும் – குமாரசாமிக்கும் மகனாகப் பிறந்தார்.
1909:காமராஜரின் தந்தையார் மறைந்தார்.
1919:காங்கிரஸ் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது காமராஜருக்கு வயது 16.
1920-22:ஒத்துழையாமை இயக்கத்திலும், கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
1930 : உப்புச் சத்தியாக்கிரகம், காமராஜருக்கு ஏற்பட்ட முதல் சிறை அனுபவம். அப்போது காமராஜருக்கு வயது 27.
1932 : திருவில்லிப்புத்தூர் வெடிகுண்டு வீச்சில் சிறை சென்றார்.
1936 : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரானார்.
1937 : விருதுநகரிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940 : இரண்டாவது உலகப் பெரும் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காகச் சிறை சென்றார்.
1941 : விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942 – 45 : ஆகஸ்டு புரட்சியில் சிறை சென்றார்.
1945 : அரசியல் நிர்ணய உறுப்பினராக சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 : விருதுநகர் தொகுதியிலிருந்து மீண்டும் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947 : அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்வு பெற்றார்.
1950 : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1952 : விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 : ஏப்ரல் 13ஆம் நாள், தமிழ்நாட்டின் முதல் – அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954 : இலங்கையிலும் மலேசியாவிலும் சுற்றுப் பயணம் செய்தார்.
1957 : இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வரானார்.
1962 : மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார்.
1963 : காமராஜர் திட்டத்தின் படி முதல் அமைச்சர் பதவியிலிருந்து அவரே விலகினார்.
1964 : அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். புவனேஸ்வரம் மாநாட்டில் அனைத்திந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று பேருரை நிகழ்த்தினார். பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார்.
1968 : அனைத்திந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லால்பகதூர் மறைவுக்குப் பின்னால் இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார். சோவியத் நாட்டில் மாஸ்கோவில் மகத்தான வரவேற்பைப் பெற்றார். பல்கேரியா, ரோமாபுரி, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1967 : ஜபல்பூரில் காங்கிரஸ் கட்சியின் பத்து அம்சந்திட்டங்களை உருவாக்கினார்.
1969 : நாகர் கோவில் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
1975 : அக்டோபர் 2ஆம் நாள் காந்தியடிகள் பிறந்த நாளில் காமராஜர் மறைந்தார். காமராஜர் தாம் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகளை நாட்டுக்காக, மக்களுக்காகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு தமது 73-வது வயதில் மறைவெய்தினார்.
தொடக்ககால வாழ்க்கை :
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக் கடை வைத்து நடத்தி வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும் :
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.
ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.
அரசியல் குரு :
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு :
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன :
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார். அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. “தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன்” என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும் அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள் :
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடி நீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும் :
- பாரத மிகு மின் நிறுவனம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
- குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.
அகில இந்திய காங்கிரசு தலைமை :
திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள காமராசரின் சிலை மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு. கே. பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம் :
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார். 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது[5]. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள் :
காமராசர் நினைவிடம், கிண்டி தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் கூறும் உண்மை :
பணக்காரன் சாப்பிடற பொருள் :
ஒருநாள் காமராஜர் அறையில் இருந்த போது, மதுரைக்காரர் ஒருவர் அவரை பார்க்க வந்தார். வந்தவர் ஒரு தாம்பாள தட்டு நிறைய ஆப்பிள் பழத்தையும், அதன் மேல் வெற்றிலை பாக்கும் ஒரு கல்யாண பத்திரிகையையும் வைத்து நீட்டினார். பத்திரிகையை எடுத்துக்கொண்ட காமராஜர் “ஏய்யா இவ்வளவு ஆப்பிள் வாங்கி வந்தே… இதெல்லாம் பணக்காரன் சாப்பிடற பொருள்யா… ஒரு ஆப்பிளுக்கு நாலு எலுமிச்சம் பழம்ன்னாலும் இதுக்கு ஐம்பது எலுமிச்சை பழமாவது வருமேய்யா! எலுமிச்சை பழம்ன்னா ஜுஸ் புழிஞ்சி நானும் சாப்பிடலாம், வர்றவங்களுக்கும் கொடுக்கலாமேய்யா… பணத்தை செலவு செய்யறது பெரிசில்ல… அதை முறையா செய்யணும்யா” என்றார். ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டு, “இதே ஆப்பிளை வேறு யாராவது வி.ஐ.பியைப் பார்ககப் போனா யூஸ் பண்ணிக்கோ” என்றார்.
தாயை அழைக்காதது ஏன்? :
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக் கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார் சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார். ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருநகருக்குச் சென்றிருந்தார். அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, `என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல, என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை, சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்தப் பிரமுகர். அதற்கு அவர் நிதானமாகப் பதில் சொன்னார். `அடப்போப்பா. எனக்குச் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க. அவங்க கூட நாலுபேரு வருவான். அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்து பேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்’ என்றார். அவரது நேர்மைக்கு இது ஒரு உச்சகட்ட எடுத்துக்காட்டு. இப்படி எத்தனையோ சம்பவங்கள்.
டாக்டர் பட்டம் வேண்டாம் :
காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர். அவர்களிடம் பெருந்தலைவர் டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம்.
நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார். நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ, மக்களோ, தொண்டர்களோ, காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான `இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை `இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும் போது கடன் காரனாக சாக விரும்பவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்.
பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. `அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச் சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார். சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார். அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டு புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதி வாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, `எனக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது `ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். அதற்கு பெருந்தலைவர் `அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் `ஒன்று செய்யுங்கள். உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார். கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தை யாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை அவரே போட்டு நிலத்தை பேசி முடித்தார். பத்திர பதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார்.
யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர்,எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. அந்த இடம் தான் இன்று அண்ணா சாலையில் உள்ள, தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும். கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொது சொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார். நீதி, நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.. என்று தங்கள் கட்சி தலைவர்களைப் பற்றி தொண்டர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது உண்டு. மேடையில் தலைவரைப் பாராட்டும் பேச்சாளரின் புகழ் மாலைக்கு பரிசாக உடனே கரகோஷம் கிடைக்கும். ஆனால்… மேடையில் முழங்கிய அந்த வார்த்தைகளுக்கும் அவர் குறிப்பிட்ட தலைவருக்கும் கொஞ்சமாவது தொடர்பு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
பெருந்தலைவர் காமராஜரின் சிறப்புகள் :
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி” என அழகுத் தமிழில் தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர் மாலைகள் என்றால் பிடிக்காது. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.
11. கதர் துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், ” என்னய்யா… இது?” என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்” வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரை தான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார் தான் மேடைகள் தோறும் “காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு “பச்சைத் தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால் தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவை தான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில் தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப் பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்ட துண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920 – ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
38. 1953 – ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால் `கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டு கோள்கள் விடுத்தன.
45. காமராஜர் 1966 – ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ் நாள் முழுவதும் இருந்தார்கள்.
47. 1953 – ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961 – ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947 – க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்’டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் “ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி” என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ் நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில் தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டு கோளுக்கும் `யோசிக்கலாம்’, `ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62 – ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ் – ல் சேர்ந்தார்.
60. 1961 – ம் வருடம் அக்டோபர் மாதம் 9 – ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947 – ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும் தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954 – ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961 – ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960 – ம் ஆண்டு முதல் 11 – வது வகுப்பு வரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ – மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தான் ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர் கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத் தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு “பாரத ரத்னா” எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான்.
1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது,
2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது,
3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர் காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25 காசு தபால் தலையை வெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசு தலைவர் என். சஞ்சீவி ரெட்டியால் 1977-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம், அமைக்கப்பட்டுள்ளது.
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரது நினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடைய பணிகளில் குறுக்கிடுவதில்லை என்பது தான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின் போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்ட போது தடுத்தார். `நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க’ என்று கமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்த போதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு, தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்ட விஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்க முற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.
96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்’ என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ’ என்று முகத்துக்கு நேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக் கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு.
100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச் சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால் ‘எல்லாம் எனக்கு தெரியும்’ என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம் இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில் நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப் பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச் சிறப்பாக வழிநடத்த முடிந்தது.
106. சில சமயம் இரவு படுக்கை இரண்டு மணி கூட ஆகி விடும். முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணி வரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தான குறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடைய கருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையையும் தள்ளிப் போட்டதில்லை. அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத் திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்
நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை… இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட செயல்வீரர் பெருந்தலைவர் காமராஜர்.