கீழடியில் 4-வது கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரிடம், தமிழக முதல்வர் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரி நீர் தேவையில்லாதபோது, அங்கிருந்து உபரியாக வரும் நீரை கணக்கில் கொள்ளக்கூடாது. எப்போது நமக்கு தேவையோ அப்போது வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சியை 3-வது கட்டமாக மத்திய அரசு மேற்கொண்டது. மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட்டாலும் 4-வது கட்ட ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ளும். அங்கு அகழ்வாராய்ச்சிக்காக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்கப்பட்டுள்ளது என்றார்.
- தி இந்து