காளைக்கு தமிழகத்தில் கோயிலடா! மூன்று உண்மை கதைகள் !

காளைக்கு தமிழகத்தில் கோயிலடா! மூன்று உண்மை கதைகள் !

காளைக்கு தமிழகத்தில் கோயிலடா! மூன்று உண்மை கதைகள் !

‘மனுஷனுக்கு மனுஷன் உதவாத இந்த காலத்துல, ‘மாடுகளை காப்பாத்தணும்’ன்னு இப்படி ஒண்ணு கூடியிருக்கானுங்களே! ச்சே… கிளப்பிட்டானுங்கய்யா’ – கடந்த சில நாட்களாய், சென்னை மெரினா கடற்கரையை கடந்து போகும் தமிழ் உதடுகள், மனம் முழுக்க தித்திப்புடன், அனிச்சையாய் உதிர்க்கும் வார்த்தைகள் இவை!

‘இதுல ஆச்சரியப்படறதுக்கு என்னங்க இருக்குது; தாயா, பிள்ளையா பழகுனாலும், ஒருசில நேரங்கள்ல மனுஷ மனசு, சக மனசை காயப்படுத்திரும். ஆனா, வளர்ப்பு பிராணிகள் அப்படியில்லை. குறிப்பா, காளைகள் அப்படி இல்லவே இல்லை. அதனால தான், புள்ளையா எங்க கூட இருந்த காசி, இப்போ எங்களுக்கு சாமியா நிற்கிறான்!’


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திருச்சியிலிருந்து திருவெறும்பூர் செல்லும் வழியில், 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியூரில், யாரைக் கேட்டாலும் காசி பற்றி இப்படித்தான் சொல்கின்றனர்; கலங்குகின்றனர். துடிப்புள்ள மவுன சாட்சியாய், ஊரின் பிரதான சுவரில் இருந்து நம்மை உற்றுப் பார்க்கிறான் காசி. காசியின் முழுப்பெயர் ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசாமி காசி. ‘காசியை நினைக்கிறப்போ எல்லாம், இன்னைக்கும் எனக்கு அந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரும். அன்னைக்கு, மதுரை பக்கத்துல ஜல்லிக்கட்டு. எப்பவுமே போட்டிக்கு நான், முருகன், காமராஜ்னு மூணு பேர் போவோம். நாங்க வாடி வாசல்ல மாட்டை அவிழ்த்து விட்டோம்னா எல்லையைத் தாண்டுனதும், மாட்டை பிடிக்குற வேலை காமராஜுக்கு! அன்னைக்கும் வாடிவாசல்ல கிளம்புன காசி, யாருக்கும் பிடிபடாம எல்லையைத் தாண்டிருச்சு! ‘திடீர்னு என்ன நினைச்சதோ தெரியலை… கயிறோட வந்த காமராஜை, மாடுபிடி வீரன்னு நினைச்சு குத்த போயிருச்சு. போச்சு… இன்னைக்கு அவனை ரத்த கோரையாத்தான் துாக்கிட்டுப் போகப் போறோம்னு நினைச்சேன். அப்போ தான், ‘ஏய் காசி… நான்தான்’னு காமராஜ் கத்துனான். ‘அவன் வயித்துகிட்டே வரைக்கும் கொம்பை கொண்டு போயிருந்த காசி, அவன் குரல் கேட்டதும் அப்படியே நின்னுச்சு பாருங்க; ப்ப்பா… அப்பதாங்க நான் முடிவு பண்ணுனேன். என் மூத்த பிள்ளை அவன் தான்னு’ காசி பற்றிய நினைவுகளில் உருகுகிறார், காசியை வளர்த்தெடுத்த காசி குமார்.

கிராமத்தினர் பெருமை :

காசி வருவதற்கு முன், சூரியூர் கிராமத்திற்கென்று கோவில் மாடு ஏதுமில்லை. அதனால் தானோ என்னவோ, கிராமத்திற்கும் சொல்லும்படியான பேர் இல்லை. காசி வந்தான். ‘ஜல்லிக்கட்டு’ எனும் போர்வையுடன் அத்தனை ஊர்களுக்கும் படையெடுத்தான். தன் வெற்றியின் வாயிலாக, அந்தந்த ஊர் மக்களின் மனங்களை வென்றான். சூரியூரின் வீரத்தையும் களம் கண்ட மண் அத்தனையிலும் பதித்தான். ‘பொதுவா, இரண்டு வயசுல மாடுகளுக்கு பல் போடும். 5 – 6 வயசுல பருவம் வர்றப்போ, மொத்த, 16 பல்லும் சேர்ந்துடும். பல் சேர்ந்ததுல இருந்து, 10 வருஷத்துக்கு தான், மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தலாம். காசி எங்ககிட்டே வர்றபோதே, பல் சேர்ந்து ஆறு வருஷம் ஆயிருந்துச்சு! ஆனாலும், அதுக்கப்புறம் அவன் வாழ்ந்ததுல, 13 வருஷமும், அவன் யார்கிட்டேயும் தோத்ததில்லை!’ பெருமை பொங்கச் சொல்கின்றனர் சூரியூர் கிராமத்தினர்.

சூரியூர் கிராமத்தின் கோவில் காளையாக காசி பங்கேற்ற முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம், கோவிலுாரில் நடந்து இருக்கிறது. அந்த போட்டியில், எல்லைக் கோட்டை தாண்டுவதற்குள் இரண்டு வீரர்கள் காசியைப் பிடித்து விட, ‘என்னப்பா கருப்பா… பிடிமாடா போயிட்டியே’ என, காசி குமார் கத்த, தன்னை பிடித்திருந்த வீரர்கள் நாலாபுறமும் சிதறுமாறு துள்ளி உதறி, எல்லைக் கோட்டை நோக்கி மின்னலென பாய்ந்திருக்கிறான் காசி. அது தான் அவன் முதல் வெற்றி; அதன்பின், தொட்டதெல்லாம் வெற்றி! இப்படி, ஊர் மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த காசி, தற்போது உயிருடன் இல்லை. 2015 ஜூலை, 10ம் தேதி, களத்தில் வெல்ல முடியாத அவனை, காலன் வென்று சென்றிருக்கிறான். தற்போது, ஊர் சுவரில் உயிரோட்டமாய் நிற்கும் காசியை தரிசிக்காமல், சூரியூர் ஜீவன்கள் யாரும் அப்பாதையை கடப்பதில்லை; குறிப்பாக, பெண்கள்! ‘எங்க புள்ளைங்க எல்லாம் அவன் கழுத்தை கட்டிக்கிட்டு விளையாடுங்க. உள்ளூர்ல போட்டின்னா, வாடிவாசலுக்கு அவன் போறதுக்கு முன்னாடி, பொங்கல் வைச்சு பூஜை பண்ணுவோம். வீட்டுக்கு வீடு, அவன் கால்களை மஞ்சத் தண்ணியில கழுவி, ஆசிர்வாதம் வாங்கி வழியனுப்புவோம். எங்க சாமிங்கய்யா அவன்!’ ஓவியமாய் சிலிர்த்து நிற்கும் காசியை பார்த்தபடியே, முந்தானையால் கண்ணீர் துடைத்துக் கொள்கின்றனர் சூரியூர்ப் பெண்கள். தினமும் காலையில் பருத்திக்கொட்டை, கோதுமை தவிடு, துவரம் பருப்பு மாவு, கொஞ்சம் பச்சரிசிக் கஞ்சி. பின், வயல்வெளியில் இளைப்பாறியபடியே பசும் புல். மதியம், தண்ணீர் மட்டும்.

இன்னும் நம்ப முடியலை :

இரவில், செரிமான பிரச்னை தரும் கோதுமை தவிடு தவிர, பருத்திக்கொட்டை, துவரம் பருப்பு மாவு, கொஞ்சம் பச்சரிசிக் கஞ்சி… இவ்வளவு தான், காசியின் அன்றாட உணவு. அன்பு கலந்து கிராமத்தினர் தரும் இவற்றை உண்டு தான், அனைவரின் உள்ளங்களையும் ஜெயித்திருக்கிறான் காசி. ‘நல்லா இருந்த பய… திடீர்னு ரெண்டு நாள் நோய்ல விழுந்தான். அப்புறம், எழுந்திருக்கவே இல்லை. ஊரே ஒண்ணு கூடி அழுதோம். மனுஷங்களுக்கு செய்ற அத்தனை சடங்குகளையும் செஞ்சு, பாடையில வைச்சு, ஊர்வலமா எடுத்துட்டுப் போய் அவனை புதைச்சோம். ‘கிராமம் முழுக்க, ஒரு வார துக்கம்! என் மூத்த புள்ள காசி இல்லைங்கிறதை, என்னால இன்னும் நம்ப முடியலைய்யா! என் பொண்ணுக்கு சீர் செய்ற அளவுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்தவன் என் காசி…’ துக்கம் தொண்டையை அடைக்க, நினைவுகளில் தடுமாறுகிறார் காசி குமார். காசி மீதான அவரின் அந்த அன்பு புரிய வைத்தது; மெரினாவில் கூடியிருக்கும் காளைகளின் உணர்வை! மனிதம் ததும்பும் மனதிற்கு, உயர்திணை என்ன; அஃறிணை என்ன!

jallikattu kalaiஜல்லிக்கட்டு காளை கோயில் !

ஜல்லிக்கட்டுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் இந்தக் காலத்திலும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மவுசு குறையவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் காளையின் கொம்புகளில் கட்டப்படும் பரிசுகளை எடுக்கும் வீரர்களுக்கு இளைஞர்களிடம் கிடைக்கும் மரியாதையே தனிதான். இவர்களுக்கே இப்படி என்றால், யாராலும் அடக்கமுடியாதபடி ஜல்லிக்கட்டுகளில் நின்று விளையாடும் காளைகளுக்குக் கிடைக்கும் மரியாதை? அது கடவுளுக்கு நிகரானது!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கிராமங்களின் கௌரவமாகக் கருதப்படும் கோயில் காளைகள் இறந்தால் அவற்றை கடவுளின் மறு உருவமாகக் கருதுவதும், ஜல்லிக்கட்டில் தங்கள் கௌரவத்தை நிலை நிறுத்தும் காளைகளுக்கு சமாதி அமைத்து அதன் மேல் காளை வடிவ சிலை அமைத்து கடவுளாகவே வழி படுவதும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் வழக்கமாக இன்றும் உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மணி கவுண்டர், தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைக்கு தனது வீட்டருகே சமாதி அமைத்து, அதனைக் கோயிலாகப் பாவித்து வருகிறார். வருடந்தோறும் மாட்டுப் பொங்கல் தினத்தில் அங்கு பூஜை நடக்கும். சுற்றுவட்டார கிராமங்களில் காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டுக்கு செல்லும் முன்பு இந்தக் காளை சமாதியில் வழிபாடு நடத்துகிறார்கள்.

‘‘25 வருஷத்துக்கு முன்னால திண்டுக்கல் பக்கம் நத்தம் பகுதியிலிருந்து இந்தக் காளையை வாங்கி வந்து, ‘ராமு’ன்னு பேர் வச்சு வளர்த்துக்கிட்டு வந்தேன். எந்த ஜல்லிக்கட்டுலயும் இதை யாரும் அடக்கியது இல்லை. செவலூர் காளைன்னா தெரியாதவங்க கிடையாது. வயசான காலத்துலதான் கொஞ்சம் தடுமாறுச்சு. எங்களுக்கு கௌரவத்தை சம்பாதிச்சுக் கொடுத்த அது எங்களுக்கு தெய்வம்தான்! எங்க பகுதியில கோயில் திருவிழா, வீட்டு விசேஷம்னு எல்லாத்தையும், காளைக்கு வேஷ்டி கட்டி மாலை போட்டு வழிபாடு செஞ்ச பிறகு தான் ஆரம்பிப்போம்.

எல்லா காளைகளுக்கும் சிலை வைக்கறதில்லை. ஜல்லிக்கட்டு களத்தில் நின்னு ஜெயிக்கிற காளைகளுக்குத்தான் இப்படி ஒரு மரியாதை’’ என்கிறார் மணி. இதேபோல விராலிமலை அருகே உள்ள சூரியூர் எழுவம்பட்டியில் சின்னையா என்பவர், தான் வளர்த்த காளைக்காக வீட்டின் அருகே சிலை அமைத்து, ஆண்டுதோறும் திருவிழா எடுக்கிறார்.

இதுபோலவே கோயில் காளைகளுக்கும் சிலைகள் வைப்பதுண்டு. கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு ஊர் சார்பில் ஒரு காளை வாங்கி வளர்க்கப்படும். இந்தக் காளைக்கு தனிநபர்கள் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அந்தக் கிராமத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் இந்தக் கோவில் காளைகள் யாருடைய நிலத்தில் வேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றித் திரியும். மேய்ச்சலிலும் ஈடுபடும். நன்கு வளர்ந்த பயிரை இது மேய்ந்தால் கூட யாரும் கோபப்பட மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டுகளில் கோயில் காளைதான் வாடிவாசலை விட்டு முதலில் வெளியே வரும். கோயில் திருவிழாக்களின் போது ஒவ்வொரு வீட்டின் சார்பிலும் வேஷ்டி, மாலை அணிவித்து குடும்பமே காளையின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். இன்னும் சிலர் காளைக்கு வேண்டிக் கொண்டு, வேண்டுதல் நிறைவேறினால் அதற்காக தங்கம் மற்றும் வெள்ளி செயின்களை காளையின் கொம்புகளில் அணிவிப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்துள்ள பெரியகுரும்பட்டி காயாம்பு அய்யனார், கருப்புசாமி கோயில் காளைக்கு, அந்தக் கோயிலின் முன்புறமே சமாதி அமைக்கப்பட்டு, ஆடி மாத திருவிழா வின் போது காளையின் சிலைக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடத்தப்படுகிறது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கோயிலின் நிர்வாகிகளில் ஒருவருமான சுப்பிரமணியன், ‘‘இலுப்பூர் சந் தையில் சுமார் 50 வருஷத்துக்கு முன்னால 190 ரூபாய்க்கு வாங்கி, கோயில் காளையா விடப்பட்டது இது. சாகும் வரை ஒரு ஜல்லிக்கட்டுல கூட யாரும் இந்தக் காளையை அடக்கியது இல்லை. அதான் தெய்வமா வணங்கறோம்’’ என்றார்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் ராப்பூசல் முனியாண்டி கோயில், சாத்தம்பட்டி பாலாயி அம்மன் கோயில்களிலும் வளர்க்கப்பட்ட காளைகளுக்கு தனியாக சமாதி அமைக்கப்பட்டு, அதன் மீது காளை சிலை வைத்து வழிபடப்படுகிறது. வசதியானவர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சமாதி அமைத்து, சிலை அமைக்கிறார்கள். வசதியில்லாதவர்கள், மாடுகள் இறந்தவுடன் அவற்றின் கொம்புகள் வெளியில் தெரிவது போல் புதைத்து, அவற்றிற்கு மாலை அணிவித்து பூஜை நடத்துகிறார்கள்.

"பொந்துகம்பட்டி கோயில் காளை வருதுனு சொன்னா.."- ஒரு காளையின் வரலாறு !

“பொந்துகம்பட்டி கோயில் காளை வருதுனு சொன்னா..”- ஒரு காளையின் வரலாறு !

“பொந்துகம்பட்டி கோயில் காளை வருதுனு சொன்னா..”- ஒரு காளையின் வரலாறு !

தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மக்கள் போராடி வருகிறார்கள். நாடு முழுவதுமே ஜல்லிக்கட்டு பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் சென்ற ஆண்டு பசுமை விகடனில் வெளிவந்த கீழ்கண்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம். காளைகளை தமிழக மக்கள் எந்த அளவுக்கு அன்போடும், அக்கறையோடும் கவனித்து வருகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை மாவட்டம், சிராவயல் என்று தமிழகம் முழுக்கவே பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு பலரும் காளை மாடுகளை வளர்ப்பது வழக்கம். இப்படி வளர்க்கப்படும் காளைகள்… பலர் வீட்டிலும் குழந்தைகளாக, குலசாமியாகவே போற்றப்படுகின்றன என்பதற்கு சாட்சி… காளைகளுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயில்கள்தான்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள நீரைத்தான் கிராமத்தில் ‘பாண்டி’ என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்ட காளையின் கல்லறையில், இன்றும் பொங்கல் வைத்து வணங்குகிறார்கள், மக்கள்.

காளை :

‘பாண்டி’யை வளர்த்து வந்த ‘கடுக்கன்’ சிவசுப்பிரமணியத்தைச் சந்தித்தோம். ”வருஷாவருஷம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளுக்கு போவேன். ஒவ்வொருத்தரும் விதவிதமான காளைகளை வளர்த்து கூட்டிக்கிட்டு வர்றத பார்த்து, எனக்கும் ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்க ஆசை வந்துச்சு. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன சிங்கம்புணரியில இருந்து ஒரு காளை வாங்கிட்டு வந்து, ‘பாண்டி’னு பேரு வெச்சு வளர்க்க ஆரம்பிச்சேன். தினமும் தவிட்டுத்தண்ணி, வைக்கோல், பருத்தி விதைனு கொடுத்து, புள்ள கணக்கா வளர்த்தேன். எங்க கிராமத்துல இருந்து முதமுதல்ல ஜல்லிக்கட்டுக்குப் போன காளை, என் பாண்டிதான். ஊர் அய்யனார் கோவில் திருவிழாவுல நடந்த ஜல்லிக்கட்டுதான் என் பாண்டிக்கு முதல் களம். முதல் தடவையே யாருக்கும் சிக்காம பரிசு வாங்கித் தந்துட்டான் என் பாண்டித்தங்கம்.

பாலமேடு ஜல்லிக்கட்டுக்குத்தான் பாண்டியை அதிக தடவை கூட்டிட்டு போனேன். சுத்துப்பட்டு திருவிழாக்கள்ல எங்க ஜல்லிக்கட்டு வெச்சாலும் கூட்டிட்டுப் போயிடுவேன். மூணு வருஷம் பாசமா வளத்தேன். நாலாவது வருஷம், தனிச்சயம் கிராமத்து ஜல்லிக்கட்டுக்கு தயார் பண்ணி வண்டியில ஏத்தும்போது கட்டுக்கடங்காம துள்ளி எதிர்பாராத விதமா கழுத்துல கயிறு இறுக்கி, கண்ணை மூடிட்டான். எனக்கு உயிரே போயிடுச்சு. ‘நம்ம கிராமத்துல இருந்து ஜல்லிக்கட்டுக்குப் போன முதல் காளை, நம்ம ஊருக்கே பேரு வாங்கியாந்த சாமிடா இது’னு சொல்லி, கம்மாக்கரையில அடக்கம் பண்ணச் சொன்ன ஊரு மக்கள், முடிஞ்ச அளவு காசு கொடுத்தாங்க. அதை வெச்சு கல்லறை கட்டினோம். மாட்டுப் பொங்கல் அன்னிக்கு கல்லறை முன்பா பொங்க வெச்சு பூஜை நடத்துவோம். எங்க கிராமத்துல காளைகள் ஜல்லிக்கட்டுக்குப் போனா… அதெல்லாம், பாண்டியோட கல்லறையை மூணு தடவை சுத்தி வந்து சூடம் கொளுத்தி கும்பிட்டுட்டு, தேங்காய் விடலை போட்டுட்டுத்தான் கிளம்புவோம்.

இப்போ ரெண்டு காளைகளை வளர்க்குறேன். இருந்தாலும் என் மூத்தப் புள்ள பாண்டிக்கு எதுவும் ஈடாகாது. கூலி வேலைக்குப் போயிக்கிட்டுருந்தவன் சொந்தமா கொஞ்ச இடத்தையும் வாங்கி வீட்டையும் கட்டி சந்தோஷமா இருக்கேன்னா… அது என் பாண்டிப்புள்ள புண்ணியத்துலதான்’ என்று கல்லறையைப் பார்த்துக் கும்பிட்டார், சிவசுப்பிரமணியன்.

பாலமேடுக்கு அருகிலுள்ள பொந்துகம்பட்டி கிராமத்துக்குள் நுழையும்போதே கம்பீரமாக காட்சி யளிக்கிறது… காளைக்கென்று கட்டப்பட்ட ஊர்க்கோயில். இதைப் பற்றி நம்மிடம் பேசிய ஊராட்சி மன்றத்தலைவர் வீரணன், ‘முத்தாலம்மன் கோவில் பால் அபிஷேகத் தேவைக்காக ஒரு பசு மாடு இருந்துச்சு. அது ஒரு காளைக் கன்னை ஈணுச்சு. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் கழிச்சு அந்தப் பசு இறந்து போகவும்… காளைக்கன்னை கோவில் மண்டபத்துல கட்டி வளர்த்தோம். ஊர் இளந்தாரிக அந்தக் காளையை கொஞ்சம் கொஞ்சமா ஜல்லிக்கட்டுக்குப் பழக்கிட்டாய்ங்க. எந்த ஊரு ஜல்லிக்கட்டுக்குப் போனாலும் ஜெயிக்காம வராது. பொந்துகம்பட்டி கோயில் காளை வருதுனு சொன்னா… வாடிவாசல் பக்கம் ஒரு பய நிக்க மாட்டான். ஆனா, ஜல்லிக்கட்டு நேரத்துல மட்டும்தான் ஆக்ரோஷம் காட்டும். மத்த நேரத்துல சின்னப்பிள்ளைங்க காளையோட காலுக்கு இடையில நுழைஞ்சு போய் விளையாடினாலும் ஒண்ணும் செய்யாது. அவ்வளவு பரம சாது.

காளை22 வருஷம் ஜல்லிக்கட்டுக்குப் போயிருக்கு. ஆனா, யாரையும் காயப்படுத்துனதே இல்ல. யார்கிட்டயும் பிடிபட்டதும் இல்லை. வயசாகி, வியாதி வந்து 2006-ம் வருஷம் மே மாசம் கோவில் மண்டபத்துலயே இறந்து போச்சு. கோவிலுக்கு எதிர்புறமே குழி தோண்டி அடக்கம் செஞ்சுட்டோம். ஊர்க்காரங்க எல்லாம் பணம் போட்டு சமாதிக்கு மேலயே மணி மண்டபம் கட்டி, அதே மாதிரி சிலை செஞ்சு, கும்பாபிஷேகமும் நடத்தினோம். மே மாசம்தோறும் காளைச்சாமிக்கு பொங்கல் வெச்சு அபிஷேகம் செய்றோம். அன்றைய நாள்ல ஊருக்கே அங்கதான் விருந்து. மாட்டுப் பொங்கல் அன்னிக்கும் அபிஷேகம் செய்வோம். சுத்துப்பட்டுல ஜல்லிக்கட்டுக்குப் போற எல்லா காளைகளையும் இங்க கூட்டிட்டு வந்து… முட்டிப்போட வெச்சு சலாம் போட்டுட்டுத்தான் கிளப்பிட்டுப் போவோம்” என்று சொன்ன வீரணன்,

”சகாயம் ஐயா மதுரை கலெக்டரா இருக்கும்போது இந்தக் காளை மண்டபத்தைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார். வழக்கம்போல அந்த வருஷமும் ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை’னு கோர்ட்ல சொன்னதும், ‘ஜல்லிக்கட்டு காளையை மதுரை மாவட்டத்துல தெய்வமா வணங்குறாங்க.. அதனால அனுமதி வேணும்’னு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கித் தந்தார்’ என்று சொன்னார்.

இதோ… ”ஜல்லிக்கட்டு நடத்துவது மிருகவதை…”. ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று மறுபடியும் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அதேசமயம், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்கிற குரல்கள், அதைவிட உரத்து ஒலிக்கின்றன!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: