அபுதாபியில் நடந்த சர்வதேச யோகா தரவரிசை போட்டியில் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபியில், அந்நாட்டின் யோகா கூட்டமைப்பு, இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் ஆஸ்திரியா நாட்டின் சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து, ௨௦௧௭, டிசம்பர், 29, 30 தேதிகளில், சர்வதேச யோகா தரவரிசை போட்டிகள் நடத்தினர். இந்தியா, ஆஸ்திரியா, தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த, 125 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வயது வாரியாக, ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.
அந்தப் போட்டியில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் கைரளி யோகா மைய மாணவன், ஆர்.லோகேஷ், 10, இந்தியா சார்பில், 10 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் பங்கேற்றான். முதல் 10 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட லோகேஷுக்கு, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாடு திரும்பிய லோகேஷுக்கு, கும்மிடிப்பூண்டி மக்கள், சக மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.