இந்தியாவில் கண்டெடுக்கப்படும் தமிழ் கல்வெட்டுகளைப் படிக்கத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருவதாக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பாக முதல் மொழி எனும் தமிழ் வளர்ச்சி அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட த.உதயசந்திரன் பேசியது:
தமிழுக்கான அமைப்பு தற்போது பொறியியல் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்க் கல்வி பயின்றவர்களுக்கோ தமிழாசிரியர்களுக்கோ மட்டும் தமிழ் சொந்தமானது அல்ல. தமிழ் அனைவருக்கும் பொதுவானது. இந்த அமைப்பு செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல்களுள் ஒன்று கலைச்சொற்களை உருவாக்குதல்.
எளிமையான கலைச்சொல் தேவை : கலைச் சொல் உருவாக்கத்தில் புலவர்கள் புலமைக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறான கலைச்சொற்கள் காலம் கடந்து நிற்கும். உதாரணமாக பை சைக்கிள் என்ற வார்த்தைக்கு புலவர்கள் வழங்கிய சொல் ஈருருளி. மிதிவண்டி என்ற சொல்லைக் கொடுத்தவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் காலம் அதைத் தான் அங்கீகரித்தது. அதே போல் காபிக்குக் கொடுக்கப்பட்ட குழம்பி என்ற சொல்லுக்குப் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. புலமைக்கு எடுத்துக்காட்டாக இச்சொல் இருந்தாலும் சமூகத்தில் எடுபடவில்லை. எனவே கலைச் சொல்லைப் பொருத்தவரை எளிமை வெற்றி பெறும்.
கல்வெட்டுகளை கற்கும் பணி தீவிரம்: எந்த விஷயத்தையும் தொழில்நுட்பத்தின் மூலமாக எடுத்துச் செல்லும்போது அதன் வீச்சு பல மடங்கு அதிகமாக இருக்கும். இதை முன்னெடுத்து தொல்லியல் துறை ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 52 சதவீத கல்வெட்டுகள் தமிழில் கிடைக்கின்றன. இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் சோகமான செய்தி என்னவென்றால் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் படிக்கப்படவில்லை.
படித்து தற்கால தமிழில் அவை மாற்றி எழுதப்படவில்லை. தற்போது பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களில் இந்தக் கல்வெட்டுகளைப் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு இதனை முற்றிலுமாக படிக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். இதற்குத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருகிறோம். இதன் தொடர்ச்சியாகக் கல்வெட்டுகளை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்து, அதிலுள்ள அனைத்து எழுத்துகளையும் தற்கால எழுத்துகளாக மாற்றம் செய்து வருகிறோம். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துகள் காலத்துக்கேற்றவாறு மாறுபட்டிருக்கும். மேலும் இவை மண்டலத்துக்கும் ஏற்பவும் மாறுபடும். இவை அனைத்தையும் அதில் பதிவேற்றம் செய்து கிட்டத்தட்ட 80 சதவீத எழுத்துகளைக் கண்டறிந்தால் பணி மிகவும் எளிமையாகிவிடும் மேலும், குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே தமிழ் மீது ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான பெற்றோர் ஆங்கிலத்தில் குழந்தைகள் பேச வேண்டும் என விரும்புகின்றனர். இதில் தவறில்லை. ஆனால் அதற்கிணையாக தமிழையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வாரம் ஒரு முறை தமிழை அவரவர் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து அதனைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.
பிபிசி தமிழ்