தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி, கோயிலில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் கோயில் வளாகத்தில் 32 இடங்களில், கோயிலைப் பற்றிய விவரங்கள் மற்றும் உள்ளே உள்ள சந்நிதிகள், அதில் இருக்கும் சாமிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கல்துாண்கள் அமைத்து தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்திபெற்று விளங்குவதோடு கட்டடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. 1,000 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயில் உலக பாரம்பர்ய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியத் தொல்லியல்துறையின் பராமரிப்பில் உள்ளது. பெரிய கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கோயிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காகக் கோயிலைப் புதுப்பிக்கும் விதமாகப் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக மேற்கு திருச்சுற்று மண்டபம் மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்தைப் பக்தர்கள் தொடாமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்குத் திருச்சுற்று மண்டபம், வடக்குத் திருச்சுற்று மண்டபம், மேற்குத் திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவுகளும் சீரமைக்கப்பட்டுகின்றன. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தரைத்தளம் சிறியவகை செங்கல்களால் ஆனது. இந்தச் செங்கல்கள் சிதிலமடைந்தும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டும் காணப்பட்டது. இதையடுத்து தரைதளத்தில் உள்ள செங்கல்களை மாற்றி புதிதாகத் தரைதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.