ரயில்வே நிர்வாக இணைய வழி பயிற்சியில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு கடந்த 21ம் தேதியில் இருந்து நடந்து வந்தது. இதை விமர்சித்து இந்தி பேசாத மாநில ஊழியர்கள் வசதிக்காக அவரவர் தாய்மொழியில் அல்லது ஆங்கிலத்தில் இணைய வழி பயிற்சி தனியாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். அதுவரை இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பயிற்சிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று நேற்று (அக். 25) முதல் ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க ரயில்வே நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. இது இந்தி பேசாத மாநில ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.