ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் உள்நோயாளியாக 3,400 தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியும் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். இந்த உதவியாளர்கள் வழக்கமாக வார்டுகளுக்கு அருகில் தரையில் அமர்ந்து தான் உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்படி, உணவு சாப்பிட்ட பின் கழிவுகளை அப்படியே விட்டு விட்டு செல்கின்றனர். இதனால் மருத்துவமனையின் தூய்மை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், இது பூச்சி மற்றும் நுண்கிருமிகள் பெருகுவதற்கும் வழிவகுக்கிறது. இதை மாற்றுவதற்காகவும், மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்காகவும் இரண்டு கட்டிட தொகுதிகளின் ஒவ்வொரு தளத்திலும் நோயாளிகளின் உதவியாளர்கள் உணவு அருந்தும் வகையில் பிரத்தியேக உணவு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து கட்டிடங்களிலும் பிரத்தியேக உணவு அறைகள் அமைக்கப்படும். அந்த அறைகளில் நோயாளிகளின் உதவியாளர் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இதனால் மருத்துவமனையில் ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிடுவது தவிர்க்கப்படும். மேலும் மருத்துவமனையும் தூய்மையாக பராமரிக்கப்படும். இந்த பிரத்தியேக உணவு அறை காலை உணவிற்காக காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், மதிய உணவிற்காக மதியம் 2 மணி மற்றும் இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும். அந்த அறையில் குடிநீர் மற்றும் கை கழுவும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை தூய்மையாக பராமரிக்கும் வகையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி : தினகரன்