பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு!

பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு!

கீழடி நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அங்கே கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மாநில தொல்லியல் துறை கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த அகழாய்வில் பாரம்பரியமான முறைகளைத் தவிர, அகழாய்வுக்கான சரியான இடங்களைக் கண்டறிய பல புதிய தொழில்நுட்பங்களையும் மாநில தொல்லியல்துறை பயன்படுத்தியுள்ளது.

கீழடி கிராமத்தைச் சுற்றி சுமார் 15 சதுர கி.மீ. பரப்புக்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிக்கின்றன. ஆகவே, எந்த இடத்தில் அகழாய்வை நடத்துவது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முதற்கட்டப் பணி. இதற்கு முன்பாக, தரைமேல் நடத்தப்படும் ஆய்வின் (survey) மூலமாகவே இந்த இடங்கள் தீர்மானிக்கப்படும்.

ஆனால், இந்த முறை அகழாய்வை துவங்குவதற்கு முன்பாக, செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு மேக்னடோமீட்டர் (magnetometer) மற்றும் தெர்மோ மேப்பிங் (thermomapping) முறைகளை வைத்து நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரடார் (ground penetrating radar – GPR) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

முதலில், கீழடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பாக மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பானை ஓடுகள், உலோகக் கருவிகள் ஆகியவை கிடைத்திருந்த நிலையில், நிலத்தடியில் உள்ள தனிமங்களை அடையாளம் கண்டுவிட்டு, பிறகு அங்கு அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி களிமண், பெரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் நிலத்தடியில் உள்ள சுவர்களை கண்டறியும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

450 ஏக்கர் பரப்பில் பத்து முக்கியமான இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதற்குப் பிறகு, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இடத்தை மேக்னெடோமீட்டர் மூலம் தரைவழியாக ஆய்வுசெய்தனர்.

இந்த மேக்னடோ மீட்டர்களை வைத்து, கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 மீட்டர் நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தடியை ஆராயும் ground penetrating radar (GPR) மூலம், அகழாய்வுக்குச் சரியான இடம் கண்டறியப்பட்டது.

இதிலிருந்து கிடைத்த முடிவுகளை வைத்துக்கொண்டு, தற்போது கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் கச்சிதமான இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருவதால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பான முடிவுகளைப் பெற முடியுமென தொல்லியல் துறை நம்புகிறது.

கீழடியில் மட்டுமல்லாமல், தற்போது உலகம் முழுவதுமே அகழாய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக, உள்ளே புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்புகள், பானைகள், செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டும் இடங்கள், பாதைகள், நினைவுக் கற்கள் ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக அரசின் தொல்லியல் துறை வரும் 2019- 20 ஆண்டில் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வைத் தொடரவிருப்பதோடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழாய்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரைவிலேயே கடலடி ஆகழாய்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

மேலும், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இடங்கள் எவை என்பதை ஆராய்வதற்கான கள ஆய்வும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது.

இதுதவிர, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் தொல்லியல் தளங்களைக் கண்டறியும் ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. இங்கு இடைக் கற்காலப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் துவங்கப்படவிருக்கின்றன.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அதற்கு அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் போன்ற பகுதிகளிலும் அகழ்வாய்வுப் பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>