மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு!!

மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு!!

இந்தியா-சீனா இடையே வர்த்தக உறவு உள்பட இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11, 12 (இன்று) ஆகிய தேதி சென்னை வர உள்ளார்.

பிரதமர் மோடியை சந்திக்கும் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை மற்றும் கோவில்களை சுற்றிப்பார்க்க உள்ளார். இதனால் மாமல்லபுரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் வரும் நிலையில், நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 1014-ம் ஆண்டில் தஞ்சை நிலப்பரப்பை ஆட்சி செய்து கொண்டிருந்த மாமன்னர் இராஜராஜ சோழன் தனது மந்திரிசபை பிரதிநிதிகளை தூதர்களாக சீனாவுக்கு அனுப்பி அந்நாட்டு அரசருடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சீனாவுடன் தமிழக மன்னர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர் என்பதை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டின் கேன்டோன் பகுதியில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருகானிஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு அப்போதைய மங்கோலிய மன்னர் செகசாய் கான் என்பவரது பெயரின் முடிவினை குறிக்கும் விதமாக ’கானிஸ்வரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று நாகப்பட்டினத்தில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புத்த கோவிலுக்கு ‘சீனக்கோவில்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போன்று தமிழகத்தை சேர்ந்த மன்னர்கள் சீனாவுடன் வர்த்தகம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதற்கான பல்வேறு ஆதாரங்கள் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு வகைகளை மன்னர் அதியமானின் மூதாதயர்கள் இங்கு பயிரிட்டனர். பின்னாட்களில் சர்க்கரையை தமிழர்கள் ‘சீனி’ என்று அழைப்பதற்கும் சீனாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: