ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்க வழக்கு

ஒன்றிய அரசின் அலுவல் மொழி சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 8வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழியாக்கக் கோரிய மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: உலகின் தொன்மையான மொழியாக தமிழ் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, காஷ்மீரி, ராஜஸ்தானி, அஸாமி உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், ஒன்றிய அரசின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலமே நாட்டின் அலுவல் மொழியாக உள்ளன.

பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழிகள் பயன்பாட்டில் இல்லை. மக்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. 85 கோடி மக்களிடம் பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. இதோடு ஒன்றிய அரசு அலுவலகங்களின் பல்வேறு நடவடிக்கைகள் சமஸ்கிருதத்தில் நடக்கிறது. நாட்டிலுள்ள 99.99 சதவீதம் பேருக்கு சமஸ்கிருதம் தெரியாது. இது, 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 20 மொழிகளை புறக்கணிக்கும் வகையில் உள்ளது.

எனவே, ஒன்றிய அரசின் அலுவல் மொழி சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்து, மற்ற 20 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கவும், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
 
நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>