அதிமுக ஆட்சி காலத்தில் சித்த மருத்துவர்கள் 104 பேர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைவிழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வேலைவாய்ப்பு பணிமூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் கடந்தாண்டு தனியார் ஏஜென்சி மூலம் அவுட்சோர்சிங் முறையில் 104 சித்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவ ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து வைரம் சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கால், தனியார் ஏஜன்சியுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தனியார் ஏஜென்சி மூலம் நியமனமான 104 பேரும் தற்காலிக அடிப்படையில் பணியைத் தொடர அனுமதித்து கடந்த பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. இது பணிநியமன விதிகளுக்கு எதிரானது.

 இதனால் நான் உள்பட பலர் அரசு சித்த மருத்துவர் பணி கிடைக்காமல் பாதித்துள்ளோம். எனக்கு பதிலாக இளையவர்கள் பலர் குறுக்கு வழியில் பணி நியமனங்களை பெற்றுள்ளனர். எனவே, 104 ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவர் பணி நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>