கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை!

கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை!

கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை!

கோவை விமான நிலையத்தில் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளையின் சிலை (BULLYBOY) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களைப் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

காங்கேயம் காளையின் பாரம்பர்ய இடம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேயம் பகுதியாகும். இந்த வகையான காளைகள் ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்காக அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சிறந்த நாட்டு மாடுகளின் பட்டியலில் காங்கேயம் மாடுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. காங்கேயம் காளைகள் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ வரை எடையுள்ள வண்டியைக் கூட இழுக்கக் கூடியவை. கடுமையான காலநிலையையும், உள்ளூர் தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டவை. தீவனம் குறைவான நாள்களில் பனையோலை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடிய தன்மை கொண்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

காங்கேயம் மாடுகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது காளைகள்தாம். காங்கேய மாடுகளில் பால் தரும் பசு இனங்களும் உண்டு. காங்கேயப் பசுக்களின் பாலில் உயர்தரச் சத்துகள் காணப்படுகின்றன. பொதுவாகப் பால் உற்பத்தி நேரங்களில் ஒரு நாளைக்கு 1.8 லிட்டரிலிருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது. பல இனப் பசுக்களின் வருகையினாலும், விவசாய வேலைகள் குறைந்து போனதினாலும், காங்கேய இன மாடுகள் குறைந்துகொண்டு வருவதாகச் சமீபத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. காங்கேய மாடுகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் விவசாய வேலைகளுக்காக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். காங்கேயம் காளைகள் இந்தியா தவிர, இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக பிரேசில் நாட்டில் காங்கேயம் காளைகள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு, அந்நாட்டு மரபு வள மையம் மூலம் சார்பாகச் சிறப்புக்கவனம் தரப்பட்டுக் கவனிக்கப்பட்டு வருகின்றன. காங்கேயம் காளைகள் கம்பீரப் பார்வையுடன், மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும். ஆனால், சிறு குழந்தைகளும் கையாளும் குணம் கொண்டது.

காங்கேயம் மாடுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்திலும், ஆறு மாதம் கழித்துச் சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும். காளைகள் பொதுவாகச் சாம்பல் நிறத்தில் இருக்கும். திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த கருமை நிறத்தில் இருக்கும். இதில் மயிலை, பிள்ளை, மாரி, காரி என உட்பிரிவுகள் உள்ளன. 1990-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்திருக்கின்றன. 2000-ல் அது நான்கு லட்சம் மாடுகளாகக் குறைந்திருக்கின்றன. 2015-ல் ஒரு லட்சம் மாடுகள்கூட இல்லை என்று சொல்லும் நிலைக்குக் காங்கேயம் மாடுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. முன்பு இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இப்போதிருப்பது அழிவின் விளிம்புதான் என்றே சொல்லலாம். தமிழக மாட்டினங்களின் தாய் இனமாகவும் காங்கேயம் மாடுகள் அழைக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில், கால்நடைத்துறையால் சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேய மாட்டு இனத்தைப் பாதுகாக்க மற்றும் இனவிருத்தியைப் பெருக்கவும் ரூ.5 கோடி செலவில், 163 ஏக்கர் நிலப்பரப்பில் காங்கேயம் மாட்டு இன ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருப்பதால்தான் காங்கேயம் காளைக்கு விமான நிலையத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் `புல்லி பாய்’ மற்றும் `பெரியவன்’ என்று அழைக்கப்பட்ட காங்கேயம் காளை முழுக்க முழுக்க இனப்பெருக்கத்திற்கான பூச்சிக்காளையாக (பொலிகாளை) செயல்பட்டது. நேரடியாகவே புல்லி பாய் காளையுடன் இணைசேர்ந்த பசுக்கள் மூலம் மீண்டும் நாட்டு இன மாடுகள் உற்பத்தி அதிகரித்தன. கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் காளை மூலம் பல்லாயிரம் பசுக்கள் கருவுற்று காங்கேயம் இனக் கன்றுகளை ஈன்றன. அந்தக் காளை வயது மூப்பின் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தது. அதன் சிறப்பை நினைவுபடுத்தும் வகையிலும், காங்கேய மாடுகளை பற்றி மக்கள் தெரிந்துகொள்வதற்காகவும்தான் புல்லி பாய் சிலை வைக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: