குற்றவாளிகளை பற்றி தகவல்களை காவல் துறைக்கு கொடுத்தால் தகுந்த வெகுமதி : தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி அறிவிப்பு!

 

தமிழகத்தில் ஆயுதம் தயாரிப்பை கண்காணிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

‘முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட “ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் -என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார்செய்யும் உரிமையாளர;கள் மற்றும் விற்பளையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர;கள் கலந்துகொண்டு காவல் துறைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இதுபோன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் காவல் ஆணையாளர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

*அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்

*அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

*விவசாயம் மற்றும் வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது.

*கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல் துறை உதவி செய்ய வேண்டும்.

*குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.

இதன்படி ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் மேற்கண்ட அறிவுரைகளை செயலாக்க வேண்டும் என காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: