பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என்று தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் அறிவிப்பை எதிர்த்து பாவேந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி. கார்த்திகேயன், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் நர்மதா சம்பத், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வேலி அமைக்கும்போது உரிய காவல் துறையினரால் பாதுகாப்பு தரப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து, அகழ்வாராய்ச்சி செய்வதற்காக குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வேலி அமைக்க பாதுகாப்பு வழங்கும்படி, பரங்கிமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் உள்ளதால் தமிழ்மொழி தெரிந்த கூடுதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்க கூடாது எனவும், அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு வரும் 25-ம் தேதிக்குள் பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.