கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!

கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5 -ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது.

5 -ம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. விரைவில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளும் தொடங்கப்படும் எனத் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கீழடி அகழாய்வுக்குப் பின் தொல்லியல் சார்ந்த விஷயங்களில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் கீழடி தொடர்பாக பல்வேறு விஷயங்களை தெரிந்து வருகின்றனர். குறிப்பாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை சார்பாக கீழடி அகழாய்வு தொடர்பாக ஆய்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது.

இதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொடுத்த நிதியின் கீழ் பல்கலைக்கழகத்தில் கீழடி அகழாய்வு தொடர்பாக ஆராய்ச்சிகள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் சங்க கால வரலாற்றையும், கீழடி அகழாய்வில் கிடைக்கும் சான்றுகளையும் ஒப்பிட்டு ஆவணங்களைத் தயார் செய்ய உள்ளது. இந்த நிலையில், அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பாக `கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள்” என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கின் தொடக்கவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது; “கீழடி 4-ம் கட்ட மற்றும் 5-ம் கட்ட அகழாய்வில் தமிழக தொல்லியல் துறைக்கு குறைவான காலமே இருந்தது. இதனால் விரிவாக அகழாய்வு செய்ய முடியவில்லை. கீழடியில் இதுவரை 10% தான் அகழாய்வு செய்துள்ளோம். அதுவே, உலக அளவில் பேச வைத்துள்ளது. முழுமையாக ஆய்வு செய்தால் தமிழக வரலாற்றையே மறுகட்டமைப்பு செய்யும்நிலை ஏற்படும். 6-ம் கட்ட அகழாய்வு ஜனவரியில் தொடங்கினால் செப்டம்பர் வரை 9 மாதங்கள் உள்ளது. இதனால் விரிவான அகழாய்வை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

வைகை நதியையொட்டி 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 100-க்கும் அதிகமாக வாழ்விடங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கீழடி. இங்குதான் மிகப்பெரிய அளவில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு உள்ளது. அதை முழுமையாக ஆய்வு செய்தால் கி.மு. 6-ம் நூற்றாண்டைவிட பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

கீழடியில் அழிவுகள் ஏற்பட்டதாக தடயங்கள் இல்லை. மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். கீழடி அகழாய்வை குறைந்தது 10 ஆண்டாவது மேற்கொண்டால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும். தொல்பொருள்கள் கண்டறியும் இடங்களிலேயே, அவற்றை காட்சிப்படுத்த வேண்டும். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கினால் அகழாய்வுக் குழிகளை அப்படியே காட்சிப்படுத்தலாம். 6-ம் கட்ட அகழாய்வில் தமிழக தொல்லியல்துறைக்கு உதவ தயாராக உள்ளேன்” என்றார்.

 

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: