“ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருள்களை கார்பன் ஆய்வுக்கு அனுப்பி அதன் வயதைக் கண்டறிய மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. இப்பொருள்கள் கார்பன் சோதனைக்காக எங்கு அனுப்பப்படுகிறது என்ற தொல்லியல் துறையின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங் குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த 13 வருடத்திற்கு முன்பு நடந்த அகழ்வாராய்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும். இதுவரை நடந்த அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களை ஆதிச்சநல்லூரிலேயே அருங்காட்சியகம் அமைத்து வைத்திட வேண்டும். 13 வருடத்திற்கு முன்பு நிறுத்திவைக்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடர்ந்திட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
அந்த மனுவை கடந்த 2-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், “அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கு கார்பன் சோதனை நடத்த வேண்டும். இச்சோதனைக்குத் தேவைப்படும் நிதியை அரசு அளிக்க வேண்டும். அத்துடன் ஆதிச்சநல்லூரில் நிரந்தரமாகப் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்” எனவும் கூறி, வழக்கை வரும் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இருப்பினும், அவசர மனுவாகக் கருதி, இன்று (8.2.2018) மீண்டும் இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், “அதிக ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்காலப் பொருள்களை கார்பன் சோதனைக்கு அனுப்பினால் மட்டுமே அதன் வயது குறித்து அறிந்து கொள்ள முடியும். இங்கு கிடைத்த பொருள்களின் வயதைக் கண்டறிவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.” என வருத்தம் தெரிவித்தனர். மேலும்,”விரைவில் கார்பன் சோதனைக்கு அவற்றை அனுப்ப வேண்டும். அகழாய்வுப் பொருள்கள் கார்பன் சோதனைக்காக எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதனை தொல்லியல்துறை இயக்குநரிடம் அறிக்கை கேட்டு சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதுகுறித்து எழுத்தாளர் காமராசுவிடம் பேசினோம், “நீதிமன்ற உத்தரவின்படி, ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பொருள்களின் புகைப்படக் கண்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பகுதியையும், காட்சி அறையைப் பாதுகாத்திடவும் மாவட்ட காவல்துறை சார்பில் நிரந்தரமாகப் புறக்காவல் நிலையம் அமைத்துக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்டத்தில் பணிகள் துரிதமாக நடந்தாலும், தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசும் மாநில அரசும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது” என்றார்.
- விகடன்