நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:முஜீபுஷரீக் (விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர்): வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள அதிநவீன சேமிப்பு நெல் குடோனுக்கு சுற்றுச்சுவர், ரோடு மற்றும் மின்சார வசதி செய்து தரவேண்டும். நாகையில் வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் மண் பரிசோதனை செய்யும் நிலையத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வேட்டைக்காரனிருப்பு கிராமத்திற்கு பகுதிநேர வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். வேட்டைக்காரனிருப்பில் உள்ள சந்திரா ஆற்றின் கடல் முகத்துவாரத்தில் உள்ள மண் திட்டுகளை அகற்ற வேண்டும்.
சரபோஜி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர்): கடந்த 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். அப்பொழுது தான் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விவசாய கடன்களை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் கூட்டுறவு வங்கி மூலம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீதர் (தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர்): கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதற்கு வசதியாக ஆறுகளில் அதிகம் உள்ள ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு செடிகளை அகற்ற வேண்டும். பண்ணைக்குட்டைகள் உள்ள விவசாயிகளுக்கு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2ஆயிரத்து100ஐ அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.
மணியன் (கிராம விவசாயிகள் சங்கத் தலைவர்): கடந்த ஆண்டு எலித் தொல்லையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன. எலி தொல்லையை ஒழிப்பதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர்கள் அதிகமான உயரத்தில் வளர்ந்து வேரோடு சாய்ந்து விடுகிறது. எனவே வளர்ச்சியை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆலோசனை கொடுக்க வேண்டும். வேதாரண்யம் பகுதிகளில் புகையான் தாக்குதல் அதிகமாக உள்ளதால் அதற்கேற்ற மருந்தை எவ்வாறு அடிப்பது என ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பிரபாகரன் (கீழ்வேளூர் காவேரி டெல்டா பாசன அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு நல சங்க துணை செயலாளர்): விவசாயம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்சார கம்பிகள் மிக தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் அபாய நிலையில் உள்ளது. எனவே மழைக் காலத்திற்கு முன்பே விவசாய நிலம் மற்றும் கிராம பகுதிகளில் தாழ்வான மின் கம்பிகளை சீர் செய்ய வேண்டும். விவசாயத்திற்கு என்று தனிபட்ஜெட் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் பேசினர். வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் உள்பட வேளாண்மை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன்