உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!

உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!

உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!

தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் “உலகத்தமிழ் மின் நூலகம்” என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டை அடுத்த தாணிச்சாவூராணி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் இவர். தற்போது அவருக்கு நிலையான ஓர் இடம் கிடையாது. தான் சேகரித்து வைத்துள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எடுத்துக்கொண்டு அவற்றை கணினி மயமாக்கும் பணிக்காக எங்கு உதவி கிடைக்கிறதோ அங்கு சென்றுவிடுகிறார்.

அவரிடம் உள்ள தமிழ் நூல்கள் மட்டுமல்லாது இன்னும் பல்லாயிரம் தமிழ் நூல்களை சேகரித்து கணினி மயமாக்கி உலகத்தமிழ் மின்நூலகம் அமைக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். தாணிச்சாவூராணியில் துவங்கிய அவரது பயணம் தற்போது கோவையை வந்தடைந்துள்ளது.

தமது கனவு நூலகம் குறித்து பகிர்ந்து கொண்ட தமிழப்பன் கூறியதாவது: “நான் ஆரம்ப காலத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றினேன். தமிழகத்தில் பல்வேறு மாவட்ட்ங்களில் பணியாற்றிவிட்டு கடைசியாக சென்னையில் பணியில் இருந்து ஒய்வு பெற்றேன். மனைவி காலமாகிவிடடார். எனக்கு இரண்டு மகள்கள், திருமணமாகி அவர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

நான் என்னிடம் உள்ள ஆறாயிரம் நூல்களோடு வாழ்ந்து வருகிறேன். எனக்கு சிறுவயது முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று. என்னுடைய மேல் கல்வியையும் தமிழிலேயே தொடர்ந்தேன். அதனால் தமிழில் முனைவர் பட்டம் பயின்றேன். அதோடு கல்வெட்டு ஆராய்ச்சியில் டிப்ளமோவையும், சுவடியியல்துறையில் பட்டப்படிப்பையும் பெற்றேன்” என்கிறார் தமிழப்பன்.

“சங்க இலக்கியங்கள் முதல் தமிழைப் பற்றிய தற்போதைய தமிழ்ப் புத்தகங்கள் வரை வைத்துள்ளேன். பணியில் இருக்கும்போது இருந்தே தமிழ் மீது உள்ள அதீத ஆர்வம் காரணமாக தமிழின் அரியவகை நூல்களை சேகரித்து வைத்துள்ளேன். எழுத்தின் மீதும் ஆர்வம் இருந்ததால் கவிதை, கட்டுரை, உரைநடை, பயிற்றுத் தமிழ் என 25 நூல்களை எழுதியுள்ளேன். 1800-களில் பதிப்பிக்கப்பட்ட அரிய தமிழ் நூல்கள் பல என்னிடம் உள்ளன.

அவைகளைத் தொடர்ந்து பராமரிப்பது மிகக் கடினமாக உள்ளது. 1889ல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், 1858-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட திருப்பாடல் திரட்டு, 1885 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட மாயூரகிரி புராணம், 1893-ம் ஆண்டு பதிப்பான தமிழ்ப் பேரகராதி, 1891-ம் ஆண்டு பதிப்பான வைத்திய அகராதி போன்ற நூற்றுக் கணக்கான பழமையான நூல்களையும், கல்வெட்டு, வரலாறு, வேளாண்மை, சங்க இலக்கியங்கள், ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை கணினி ஏற்றம் செய்வதற்காக ஒரு நாடோடியாக சுற்றித் திரிகிறேன்” என்று மேலும் தெரிவித்தார் தமிழப்பன்.

தமிழில் இருந்த எண்ணற்ற மதிப்பு மிக்க நூல்கள் பல வெவ்வேறு காலகட்டத்தில் அழிந்துவிட்டன. பல்லாயிரம் அரிய நூல்கள் அழிந்துவிட்டதால் இனி இருக்கும் நூல்களையாவது காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று கூறும் தமிழப்பன் அதை மின் நூலகமாக அமைத்தால் மட்டுமே அவற்றை என்றென்றும் அழியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார்.

“என்னிடம் உள்ள நூல்களை நான் உயிரோடு உள்ள வரை பாதுகாக்க முடியும். ஆனால் எனக்குப் பிறகும் அரிய தமிழ் நூலகங்கள் பின் வரும் தலைமுறைகளுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே நான் மேற்கொண்டுள்ள உலகத்தமிழ் மின் நூலகம் என்னும் முயற்சி. தமிழில் அச்சு தோன்றிய காலம் முதல் தற்போது வெளிவந்துள்ள புத்தகங்கள் வரையிலும், தமிழைப் பற்றி பிற மொழிகளில் வந்துள்ள நூல்களையும் தொகுப்பதே உலகத்தமிழ் மின் நூலகத்தின் குறிக்கோள். அதற்கு நூல் பட்டியல் தேவைப்படுகிறது.

நான் செய்து வரும் பணிக்கு உறுதுணையாக தன்னார்வலர்கள் முன் வர வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் புத்தகங்களின் தகவல்களை சேகரிக்க சூப்பர் கம்ப்பியூட்டர் ஒன்றும் தேவைப்படுகிறது. உலகத் தமிழ் மின் நூலகத்தில் ஒரு சில புத்தகங்களை கொடுக்க முடியாவிட்டாலும் அந்த குறிப்பிட்ட புத்தகத்தின் தகவலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.

நான் மட்டுமே இதற்கான முழுப்பணியையும் செய்துவிட முடியாது என்பதால் புத்தகங்களை வழங்குவதற்கும், தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். என்னுடைய ஓய்வூதியத்தொகையில் உணவுக்குப் போக மீதம் உள்ளதில், இருவருக்கு சம்பளம் கொடுத்து என்னிடம் உள்ள புத்தகங்களை ஸ்கேன் செய்து கணினி மயமாக்கி வருகிறேன். சூப்பர் கம்ப்யூட்டர், ரோபோட் ஸ்கேனர், நூல்கள் இருக்கும் இடத்தை தேடிச் செல்ல ஏதுவாக ஒரு வாகனம் போன்ற உதவிகள் தற்போது எனக்கு தேவைப்படுகின்றன” என்கிறார் அவர்.

“இந்த உலகத் தமிழ் மின் நூலகம் வழியாக தமிழைப்பற்றிய அனைத்தையும் இலவசமாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில நண்பர்கள் தொழில் நுட்ப கருவிகளை கொடுத்தது உதவி வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகள் பெங்களூரில் ஐ டி நண்பர் ஒருவர் உதவியுடன் சில ஆயிரம் நூல்களை கணினியில் ஏற்றினேன். அந்த நண்பர் தனது ஐ டி பணிகளை முடித்துவிட்டு மாலையில் வந்து எனக்கான உதவிகளை செய்து கொடுத்தார்.

இதுபோல் உதவி கிடைக்கும் இடங்களை தேடிச் சென்று உலகத்தமிழ் மின் நூலகம் அமைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். தற்போது கோவையில் ஒரு சில உதவிகள் கிடைத்துள்ளன. இங்கே பணிகளை தொடர்கிறேன். என்னிடம் உள்ள புத்தகங்களை வைத்து இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் ஒரு நூலகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அதற்காக நிலம் ஒதுக்கி கட்டடம் கட்டும் பணிகளும் ஆரம்பமாகியிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக போருக்கு பிறகு அந்த பணிகள் நின்று விட்டன. உலகத்தமிழ் நூலகம் என்ற பெயருக்கு ஏற்ப இன்னும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்று இந்த நூலகம் முழுமை பெற வேண்டும் என்பதே விருப்பம்” என்கிறார் தமிழப்பன்.

  • பிபிசி தமிழ்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: