திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன, 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர்.
கல்லிடைக் குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மன்னர் குலசேகர பாண்டியனால் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் திருவில்லி விநாயகர் சிலைகள் கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருடு போயின. இதுதொடர்பாக கல்லிடைக் குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து கடந்த 1984-ஆம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும் உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துணைக் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் இந்த வழக்கை மீண்டும் விசாரித்தனர்.
விசாரனையில், திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரில் உள்ள ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி உள்ளிட்டோரின் உதவியுடன், இச்சிலை கல்லிடைக் குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலுடையது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசிடம் நிரூபிக்கப்பட்டது.
இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் கூறுகையில், 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 700 ஆண்டுகள் தொன்மையான நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 30 கோடியாகும். இந்தச் சிலை தில்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை (செப். 13) கொண்டு வரப்பட உள்ளது. அதன்பின், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் என்றனர்.