குறைந்த நிலத்தில் 6,000 மரக்கன்றுகள்!: தருமபுரி அருகே அபுதாபியில் பணியாற்றி வரும் தமிழர் அடர்வனத்தை உருவாக்கி சாதனை..!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே குறைந்த நிலத்தில் 6,000 மரக்கன்றுகளுடன் ஒரு வனத்தையே உருவாக்கி அபுதாபியில் பணியாற்றி வரும் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். பறையப்பட்டி புதூரை சேர்ந்த குப்புசாமி அபுதாபி நாட்டில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இயற்கையின் மீது தீராத காதல் கொண்ட அவர், குறைந்த பரப்பில் அதிக மரக்கன்றுகளை நடும் மியாவாக்கி முறையை இணையதளம் வாயிலாக அறிந்துள்ளார். பின்னர் விடுமுறையில் தமது சொந்த ஊருக்கு திரும்பிய போது தனது 50 சென்ட் நிலத்தில் அதை செயல்படுத்தியுள்ளார். வேம்பு, புங்கன், அரசு, தேக்கு, கொய்யா, மா, பலா உள்ளிட்ட 100 வகையான மரக்கன்றுகள் வளர்த்து 3 ஆண்டுகளில் அதை அடர்ந்த வனமாக மாற்றி குப்புசாமி சாதனை படைத்துள்ளார்.

மியாவாக்கி காடுகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், தூய காற்றும் மழைக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக குப்புசாமி தெரிவித்தார். மனதுக்கு இதமாக ஒலி எழுப்பும் கிளி, குருவி உள்ளிட்ட பறவைகள், தினம் வரும் கண்ணுக்கு குளுமையான பகுதி சொர்க பூமியாக மாறிவிட்டதாக அவர் கூறினார். ஜப்பானிய தாவரவியல் அறிஞர் அகிரா மியாவாக்கி அறிமுகப்படுத்திய காடு வளர்ப்பு முறையில் மரங்கள் 10 மடங்கு அடர்த்தியாக வளர்கின்றன. தற்காலத்தில் பல நாடுகளிலும் மியாவாக்கி மரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: