அழிந்து வரும் 5000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்! வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை!

அழிந்து வரும் 5000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்! வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை!

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் வனப் பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் பராமரிக்கப்படாததால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கரிக்கையூர் மலைக் கிராமம். இந்த பகுதியில் இருளர் மற்றும் குறும்பர் இன பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். அழகிய மலைத் தொடரின் சரிவு பகுதியில் மலைக்கும் சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கரிக்கையூர். கிராமத்தை ஒட்டியே காப்புக்காடு யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உலவும் மரங்கள் நிறைந்த வனப் பகுதியாக உள்ளது.

இந்த வனத்தின் சில மணி நேர பயணத்தில் உள்ளது நீலகிரி வரலாற்றின் பொக்கிஷமாக புதையலாகக் கருதப்படும் பாறை ஓவியங்கள்.சாதாரண மக்கள் அவ்வளவு எளிதில் சென்றடைய முடியாத வனத்தின் நடுவில் உள்ள மிகப்பெரிய பாறையின் அடியில் உள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையைப் பாறைகளில் ஓவியங்களாக வரைந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

2,500 முதல் 5,000 ஆண்டுகள் பழைமையான ஓவியங்களாக இதனை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பேச்சு மொழிகள் இல்லாத காலத்தில் மண் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தி அந்த காலத்தை நம் கண் முன்னே காட்சியாய் விரியும் வகையில் சித்திரங்களாக வடித்துள்ளனர்.

இதில் அப்போது வாழ்ந்த மக்களின் வேட்டை, உணவு, வழிபாடு, போர், கொண்டாட்டம், நடனம், இசைக் கருவிகள், பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள், விலங்குகள் பறவைகள் எனத் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இந்த பாறை ஓவியத்தில் சிந்து சமவெளி நாகரிக குறியீடுகள் இருப்பதைக் கண்டு வியந்து போய் உள்ளனர்.இப்படிப்பட்ட தென் இந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதி இன்றைக்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தாலும், சமூக விரோதிகளின் செயலாலும் மெல்ல சிதைவுற்று அழிவின் விளிம்பில் உள்ளது ஆய்வாளர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் பாறை ஓவியங்கள் இந்திய மானுட வரலாற்றில் முக்கிய இடமாக உள்ளது. ஒரே பறையில் அதிக ஓவியங்கள் இந்த பகுதியில்தான் உள்ளது.

2,500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் இந்த இடத்தில் வரைந்திருக்கக் கூடும். சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் அதே குறியீட்டு எழுத்துகள் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. செம்பு கற்காலம் எனப்படும் காலத்தில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த ஓவியங்கள் எந்த இன மக்கள் வரைந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த பகுதியில் வாழும் இருளர் பழங்குடிகள் தங்கள் மூதாதையரின் வசிப்பிடமாகக் கருதுகின்றனர். அடர் வனப்பகுதிக்குள் இருந்தும் வனத்துறையின் அலட்சியத்தாலும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததாலும் இன்றைக்குச் சமூக விரோதிகள் இந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பழைமையான ஓவியங்களின் மீது கரி, சுண்ணாம்பு,பெயின்ட் போன்றவற்றைக் கொண்டு ஓவியத்தை பாழ்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பாறையில் இருந்த பல அறிய ஓவியங்கள் அழிந்துவிட்டன மீதம் உள்ள ஓவியங்களும் அழிந்துவருகிறது. இதனால் வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>