தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக். 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 2 இடங்களையும் திமுக கைப்பற்ற வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர்.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதிலும் அதிமுக மட்டும் வெறும் 66 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது.இதனால், சட்டப்பேரவையில் தங்களின் பலத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அதில், வைத்திலிங்கம் பதவிக்காலம் முடிய ஓராண்டு, கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் முடிய, ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன,

இதையடுத்து மாநிலங்களவையில் 2 காலி இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர்4ல் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 22 ஆகும்.


தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களே மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26 ஆக உள்ளது. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரே, தமிழக மாநிலங்களவை எம்பி பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

நன்றி :தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>