1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!

1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!

கரூரில், மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. கரூர் உட்பட தமிழகத்தில் 60 இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இது தவிர, 140 இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்துள்ளது. இந்த 200 இடங்களில் நடைபெற்றுள்ள ஆய்வுகளையும் பகுப்பாய்வு செய்து, தமிழர் நாகரிகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு நூலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம். இதற்கு இசைவு தெரிவித்தாலே 100 கோடி ரூபாய் நமக்கு வரும்.

கீழடி போலவே கரூரிலும் அகழ்வாராய்ச்சியைத் தொடங்க வாய்ப்பு உள்ளது. காரணம், 1,850 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக வளர்ச்சியில் முன்னோடியாக கரூர் இருந்துள்ளது. அமராவதி நதிக்கரையோரம் உள்ள கரூர், நதிக்கரை நாகரிகமாக திகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கிய, கலாசாரம் போன்றவற்றை தொகுத்து, நூலாகவும் வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. புவியியல் ரீதியாக 8 வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன” என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: