கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சின்ன காரக்குப்பம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரியவகை நடுகல் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நடுகல் போரில் உயிர் இழந்த வீரனுக்காகவும், அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனின் மனைவிக்காகவும் எடுக்கப்பட்டதாகும். இந்த நடுகல் 12 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் வீரன் ஒருவன் வலது கையில் குறுக்கு வாட்டில் வாள் பிடித்தபடி இருக்கிறான். அவனது இடது கையில் சிறிய குத்து வாளும் உள்ளது. காதில் வட்டக் குழை, கைகளில் காப்பு ஆகியவற்றை அணிந்துள்ளான். அந்த வீரனுக்கு வலப்பக்கத்தில் பெண் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் இடக்கையில் மலர் கொத்தும், வலதுகையில் மதுக் குடுவையும் வைத்திருக்கிறாள். இதன் மூலம் அந்தப் பெண் வீரனின் மனைவி என்றும் தன் கணவன் இறந்தவுடன் அவளும் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டாள் என்பதை அறியமுடிகிறது.
மேலும், வீரனின் வலது கால் அருகில் நாய் ஒன்று உள்ளது. நாய்க்குப் பின்புறம் (பெண் காலுக்கு கீழ்) அடையாளம் காணமுடியாத ஏழு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை ஒரு சமயச் சின்னமாகக் கருத முடிகிறது. இந்தச் சமயச் சின்னத்துடன் தொடர்புடைய வீரன் இதைக் காவல் காத்ததாகவும், நாய் அந்த வீரனுக்கு துணையாகக் காவல் காத்திருக்கலாம் என தெரிகிறது.
நடுகல்லின் வலது மேல் மூலையில் இறந்த வீரன் மற்றும் அவனின் மனைவியை நான்கு தேவலோகப் பெண்கள் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்வது போன்று காட்டப்பட்டுள்ளது. தற்போது, இந்நடுகல் `சிலைக்கல்’ என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. தீராத தலைவலி ஏற்படும்போது நடுகல்லை வணங்கினால் தலைவலி நீங்குகிறது என்ற ஐதிகம் அப்பகுதி மக்களிடையே பலமாக உள்ளது. இந்த நடுகல்லைப் பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.