திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த பகுதியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் பண்டைய தமிழர் நாகரிகம் பற்றிய அகழ்வாராய்ச்சி பணி 2015–ம் வருடம் முதல் நடைபெற்றது. இந்த பணி தொடர்ந்து 3 கட்டங்களாக நடந்தன. கடந்த 2018–ம் வருடம் முதல் தமிழ்நாடு தொல்லியில்துறை சார்பில் 4–வது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.
இதை அனைத்திலும் மொத்தம் 13 ஆயிரத்து 638 பொருட்கள் கிடைத்தன. 5–ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மாநில அரசு ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு அருகில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை அளந்து வழங்க அரசாணை வெளியிட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து கலெக்டரின் அறிவுரைப்படி இடம் தொல்லியல் துறைக்கு வழங்கியும், அந்த இடத்தை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் முடிவுற்ற பின்பு, அருங்காட்சியகத்திற்காக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் இருந்து அருங்காட்சியகத்திற்கான கட்டிட பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்த தகவலை தாசில்தார் ராஜா தெரிவித்துள்ளார்.