‘தமிழின் முதல் நாவலை எழுதியவர்’- கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் கொண்டாட்டம்

திருச்சி அருகே குளத்தூரில் 1826ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். தமிழ், ஆங்கில புலமைவாய்ந்த வேதநாயகம்பிள்ளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் தமிழ் நீதிபதியாக தரங்கம்பாடியில் நியமிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய இவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராக பதவி வகித்தார். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர்.

வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளை போன்று உரைநடையில் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். இவரது 195வது பிறந்த நாள் விழா, மயிலாடுதுறை தமிழ் சங்கத்தினரால் இன்று கொண்டாடப்பட்டது. கல்லறை தோட்டத்தில் உள்ள வேதநாயகம் பிள்ளை உருவசிலைக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் மயிலாடுதுறை தமிழ் சங்கத்தினர், அறிஞர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வேதநாயகம்பிள்ளையின் உருவ சிலையை நிறுவ வேண்டும். வேதநாயகம் பிள்ளையின் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும். அவரது புதினத்தை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென தமிழ்ச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>