சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

பழநியை  சேர்ந்தவர் இளம்பெண் மென்பொறியார் அன்னபூரணி (32). விவசாய குடும்பத்தில்  பிறந்தவர். சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வேலைவாய்ப்புக்கள் கிடைத்தது. எனினும் அன்னபூர்ணி விவசாயம், கால்நடைகள் மீது இருந்த  ஆர்வத்தின் காரணமாக கிடைத்த வேலைகளை தொடராமல் விவசாயம் சார்ந்த தொழிலில்  ஈடுபட முடிவு செய்தார்.

ஒருகட்டத்தில் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த  மாடுகளுக்கு தேவையான தீவனங்களை தானே இயற்கையான முறையில் செய்து கொடுக்க  எடுத்த முயற்சியில் அன்னபூரணி ஈடுபட துவங்கி, அதில் வெற்றியும்  கண்டுள்ளார்.கம்பு, சோளம், அரிசி, கோதுமை, கடலை, துவரை, உளுந்து,  வரகு, குதிரைவாலி, தவிடு என 13 வகையான உணவு பொருட்களை கொண்டு இயற்கை  தீவனத்தை அதனை தங்கள் வீட்டில் வளர்த்து வந்த மாடுகளுக்கு கொடுத்தார்.  

அப்போது மாடுகள் நல்ல ஆரோக்கியத்துடன், அதிக பாலையும் கொடுத்துள்ளது.  இதையடுத்து அன்னபூரணி அருகில் உள்ள விவசாயிகளுக்கும் இந்த தீவனத்தை  கொடுத்து சிறியளவில் தனது இயற்கை தீவன தொழிலை துவங்கியுள்ளார். பின்னர்  அன்னபூரணி தொழிற்சாலை அமைத்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா,  பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கும் இயற்கை தீவனத்தை அனுப்பினார். இதில்  தற்போது மாதம் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி பழநியில் இளம்பெண் தொழிலதிபராக  வலம் வருகிறார்.

இதுகுறித்து அன்னபூரணி கூறுகையில், ‘ஏசி அறையில்  அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும்போது கிடைக்காத  மனநிறைவு, தனக்கு பிடித்த விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதில்  கிடைக்கிறது. தமிழகத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயம் மற்றும்  அதுசார்ந்த தொழில்களில் தன்னை போன்று ஈடுபட வேண்டும்’ என்றார். இயற்கை தீவன  ஆராய்ச்சியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து அசத்தி வரும் இளம்  தொழிலதிபர் அன்னபூரணிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: