திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.
கலியாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். ஆசிரியராக திருவாரூரில் பணி செய்த போது கலியாணசுந்தரமும் அங்கேயே வளர்ந்தார். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.
கல்வி
தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.
தமிழ்க் கல்வி
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளை நீலகிரிக்குச் சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார்.
ஆசிரியப் பணி
1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது கமலாம்பிகை என்ற நங்கையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார்.அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
பத்திரிகைப் பணி
பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
அரசியல் பணி
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
எழுதிய நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
- யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் – 1908
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – 1927
- நாயன்மார் வரலாறு – 1937
- முடியா? காதலா? சீர்திருத்தமா? – 1938
- உள்ளொளி – 1942
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
- உரை நூல்கள்
- பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
- பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் – 1923
- காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1941
- திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
- திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்
- தேசபக்தாமிர்தம் – 1919
- என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
- தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
- தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு – 1928
- சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து – 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் இங்கு காணொலி)
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
- இந்தியாவும் விடுதலையும் – 1940
- தமிழ்க்கலை – 1953
சமய நூல்கள்
- சைவசமய சாரம் – 1921
- நாயன்மார் திறம் – 1922
- தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
- சைவத்தின் சமசரசம் – 1925
- முருகன் அல்லது அழகு – 1925
- கடவுட் காட்சியும் தாயுமானவரும் – 1928
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் – 1929
- தமிழ் நூல்களில் பௌத்தம் – 1929
- சைவத் திறவு – 1929
- நினைப்பவர் மனம் – 1930
- இமயமலை (அல்லது) தியானம் – 1931
- சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
- சமரச தீபம் – 1934
- சித்தமார்கக்ம – 1935
- ஆலமும் அமுதமும் – 1944
- பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி – 1949
பாடல்கள்
- முருகன் அருள் வேட்டல் – 1932
- திருமால் அருள் வேட்டல் – 1938
- பொதுமை வேட்டல் – 1942
- கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
- புதுமை வேட்டல் – 1945
- சிவனருள் வேட்டல் – 1947
- கிறிஸ்து மொழிக்குறள் – 1948
- இருளில் ஒளி – 1950
- இருமையும் ஒருமையும் – 1950
- அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி – 1951
- பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் – 1951
- சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் – 1951
- முதுமை உளறல் – 1951
- வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் – 1953
- இன்பவாழ்வு – 1925
பயண இலக்கிய நூல்கள்
- இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)
பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள்
- தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி
- ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து
- கர்னாடிக் மில் வேலைநிறுத்தம்
- தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும்
- இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு
- ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும்
- பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம்
- வேலைநிறுத்த உரிமை – கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில்
- மில் வட்டாரத்துக் கலகங்கள்