தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!

ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 – மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர். புலவரின் பேரனார் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, பெரிய தந்தையார் புலவர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை போன்ற ஆளுமைகளின் வழிகாட்டலில் பயணித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் மகன் குருகவி என அழைக்கப்படும் ம. வே. மகாலிங்கசிவம் என்பவருக்குப் பிறந்தவர் பார்வதிநாதசிவம். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். கவிஞர் கதிரேசம் பிள்ளை, புலவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், ரி. சண்முகசுந்தரம் போன்றவர்களிடம் தமிழ் கற்றார். பின்னர் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1957 ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் பாவேந்தர் பாரதிதாசனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கவித்துவம் பற்றிக் கற்றார்.

ஆசிரியப் பணி

புலவர் பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய பார்வதிநாதசிவம் யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்விக்கழகத்தில் ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உட்பட நாட்டின் பல பாடசாலைகளில் ஆசிருயப் பணியாற்றினார். சிறிது காலம் கொழும்பில் உள்ள மக்கள் சீனக் குடியரசு தூதரகத்தில் பணியாற்றிய பின்னர் ஊடகத் துறையில் நுழைந்தார்.

பத்திரிகைப் பணி

சுதந்திரன் பத்திரிகையில் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த பார்வதிநாதசிவம், பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழின் ஞாயிறு இதழுக்கு ஆசிரியராக 1970-1980களிலும், உதயன் பத்திரிகையில் 1990களிலும் பணியாற்றினார். அத்துடன் முரசொலி, சஞ்சீவி, தினக்குரல் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகளின் தொகுப்பு தமிழ்ச்செல்வம் என்ற பெயரில் வெளிவந்தது. ‘கலைக்கண்’ என்ற பெயரில் இதழ் ஒன்றை 1970களில் வெளியிட்டு வந்தார்.

இலக்கியப்பணி

மரபுக்கவிதை, குறுங்காவியங்கள்,நவீன கவிதை, மற்றும் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள் ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தியவர்.

சுதந்திரன் பத்திரிகையில் சிறுவர் பகுதியும், வீரகேசரியில் கவிதைகளும், தினகரனிலும் உதயனிலும் கட்டுரைகளும் அதிகம் வெளிவந்துள்ளன. ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளுடன் நேர்காணல்களை நிகழ்த்தியுள்ளார். அவர்களில் சு. வித்தியானந்தன் முக்கியமானவர்.

“ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன.”என நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மகாஜனாக் கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில் சுதந்திரன் வீரகேசரி ஆகிய மாணவர் பகுதியில் ஆக்கங்கள் எழுதியுள்ளார்.

வெளிவந்த நூல்கள்

  • காதலும் கருணையும் (கவிதைகள்) 1972
  • இருவேறு உலகம் (கவிதைகள்) 1980
  • இன்னும் ஒரு திங்கள் (கவிதைகள்) 1988
  • இரண்டு வரம் வேண்டும் (கவிதைகள்) 1985
  • பசிப்பிணி மருத்துவன் (கவிதைகள்) 2001
  • தமிழ்ச் செல்வம் (கட்டுரைகள்)

பெற்ற கௌரவங்கள்

  • கலாபூஷணம்
  • ஆளுநர் விருது – 2012

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>