சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்! : வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது.

பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2,000 கோடி ரூபாய் அளவிற்கு பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது. பையனூர் பங்களாவை பொறுத்தவரை இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் இருந்து வலுக்கட்டாயமாக சசிகலா மிரட்டி பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சொத்து தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவை பினாமி சொத்துக்கள் என்று கண்டறியப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் 1000 கோடி ரூபாய்க்கு மேல் பினாமி சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இது சம்பந்தமான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த முடக்கம் என்பது இனி தொடர்ச்சியாக நடைபெறும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: