தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஐயா கோ. நம்மாழ்வார் நினைவு நாளில் வணங்குவோம்!!!

Nammalvaar.jpg

கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 – 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

வரலாறு

நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

எதிர்த்துப் போராடியவை

  • பூச்சி கொல்லிகள்
  • மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
  • மரபணு சோதனைகள்
  • பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
  • வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
  • விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்

  • சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு[2]
  • இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
  • 60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
  • மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
  • “தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்’ என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். “பேரிகை’ என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.

நடைப் பயணங்கள்

  • 1998 – கன்னியாகுமாரி – சென்னை – சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
  • 2002 – 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் – அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
  • 2003 – பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் – கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
  • 2002 – இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.

உருவாக்கிய அமைப்புகள்

  • 1979ல் குடும்பம்
  • 1990 லிசா (1990 – LEISA Network)[4]
  • 1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
  • இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
  • நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
  • வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
  • தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

படைப்புகள்

  • தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
  • உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
  • தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
  • நெல்லைக் காப்போம்
  • வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
  • இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
  • நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
  • பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
  • நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
  • களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

இறப்பு

இவர் 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: