பாரா ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் 3வது இடம் பிடித்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நேற்று உயரம் தாண்டுதல் (டி42) பிரிவில், இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார், வருண் சிங் ஆகியோர் பங்கேற்றனர். பதக்கச் சுற்றில் இருந்த 9 வீரர்களில் மாரியப்பன், சரத்குமார் ஆகியோர் முதல் 2 இடங்களில் இருந்தனர். அமெரிக்க வீரர் சாம் கிரெவி 3 இடத்திலும், வருண் சிங் 4வது இடத்திலும் இருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் மாரியப்பன், அமெரிக்க வீரர் சாம் கிரெவி இருவரும் 1.86 மீட்டர் தாண்டி சமநிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து, 1.88 மீட்டர் உயரம் தாண்டும் முயற்சியில் இறங்கினர். இதில் மாரியப்பன் 3 வாய்ப்புகளையும் தவறவிட்ட நிலையில், சாம் கடைசி வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 2வது இடம் பிடித்த மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மாரியப்பன் பெறும் 2வது பதக்கமாகும். ஏற்கனவே ரியோ பாரா ஒலிம்பிக்கில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்றிருந்தார். சரத்குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சேலம் அருகே தீவட்டிப்பட்டியை அடுத்த பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், நேற்று வெள்ளிப் பதக்கம் வென்றதையடுத்து சொந்த ஊரில் அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மகனின் சாதனை குறித்து அவரது தாயார் சரோஜா கூறுகையில், ‘எனது மகன் கடந்த முறையை போல, இப்போதும் தங்கம் வெல்வார் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வகையில் மீண்டும் அவர் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. கண்டிப்பாக அடுத்தடுத்து வரும் போட்டிகளில், எனது மகன் மீண்டும் தங்கம் வென்று சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,’ என்றார்.
நன்றி : தினகரன்