மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடி கிராமத்தில் தொல்லியியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்தன. கடந்த 2015 முதல் 2016 வரை இரண்டாம் கட்டமாக அகழாய்வு நடைபெற்றது.
இதன் மூலம் தமிழர்களின் வரலாற்று தொன்மை குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்தன. பல்லாயிரக்கணக்கான தொல்லியியல் பொருட்களால், 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழர் வாழ்வியலை இதன் மூலம் அறிய முடிந்தது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இந்த ஆய்வில் சுமார் 5300 பண்டைய பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது. மேலும், இரண்டாம் கட்ட அகழாய்வில் இங்கு, மிகப்பெரிய சாயத் தொழிற்சாலை இருந்ததை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய தொல்லியியல் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் வேறுபாடின்றி குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கும் விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஆய்வினை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுப்பெற்று வந்த நிலையில், கீழடியில் அகழாய்வுக் குழுவின் பொறுப்பாளராக பணி புரிந்து வந்த திரு. அமர்நாத், தற்போது அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
”இந்த ஆய்வை இத்தோடு இழுத்து மூடுவதற்காகத்தான் என்னை பணியிட மாற்றம் செய்துள்ளனர். என்னை மட்டுமல்ல என்னைச் சேர்ந்த குழுவில் இருந்த 25 பேரையும் பல்வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்துள்ளனர்.
பணியிட மாற்றம் குறித்து இந்திய தலைமை பொறுப்பாளர் ராகேஷ் திவாரியிடம் கேட்டேன். அதற்கு அவர், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பணியிடம் மாற்றப்படும். அந்த வகையில் மாற்றினோம். இது வழக்கமான இடமாறுதல்தான். இது எங்களோட விருப்பம். நீங்கள் அசாமில் போய் பணியில் சேருங்கள் என்றார். 3 வருடங்களாக நான் இங்கு உள்ளேன். வழக்கம்போல 2 வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டுமானால் கடந்த ஆண்டே என்னை மாற்றியிருக்க வேண்டும். ஏன் மாற்றவில்லை.
மூன்றாம் கட்ட அகழாய்வு உடனடியாக தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதி மார்ச் 17ல் ஒதுக்கப்பட்டு வந்துவிடும் என்றார்கள். அதனை நம்பி நான் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கிவிட்டேன். இந்த நிலையில் பணியிட மாற்றம் என்றால், இந்த வேலையை இழுத்து மூடுவதற்கான பணிகளை செய்கிறார்கள் என்று அர்த்தம்.
எனக்கு பதில் ஸ்ரீராம் என்பவரை நியமித்துள்ளனர். அவர் இந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக செய்யமாட்டார். எனக்கு தெரியும். இந்தப் பணிகளுக்கான விஷயத்தை நானும், என்னோடு பணியாற்றி வந்த 25 பேர் கொண்ட குழுவும் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். திடீரென வேறு குழுவை போட்டால் எப்படி பணி செய்ய முடியும். முழு மனதாக நான் இந்த பணியை விட்டு போகவில்லை. என் மனது வலிக்கிறது” என்று திரு. அமர்நாத் கவலையுடன் தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.