பால்வீதி உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை எழுதியவரும் கவிக்கோ என்று அன்பாக அழைக்கப்பட்டவருமான புகழ்பெற்ற மறைந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமானை நினைவுபடுத்தும் விதமாக அவரது பட்டப்பெயர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தலைவரும் வர்த்தகருமான திரு முஸ்தபா இதை முன்னெடுத்தார்.
மெல்பர்னில் மெல்ட்டன் எனும் வட்டாரத்தில் தமக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பைக் கட்டவிருப்பதாக வும் அது அமையவுள்ள சாலைக்குத் தமிழ்ப் பெயர் சூட்டவேண்டும் என்று விரும்பியதாகவும் திரு முஸ்தபா கூறினார்.
“மகாகவி பாரதியார், ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்களில் அமைந்த தெருக்களின் நினைவு வந்தது. அதேபோன்று ஆஸ்திரேலியாவில் ஏன் நாம் முயற்சி செய்யக்கூடாது? என்று தோன்றியது,” என்று தமிழ் முரசிடம் திரு முஸ்தபா கூறினார்.
அப்பெயர் தமது நண்பரும் முஸ்தபா அறக்கட்டளைக்கு ஆலோசனை வழங்கியவருமான கவிஞர் அப்துல் ரகுமானின் பெயராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
மேலும், தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் உள்ள முக்கியமான தமிழ்க் கவிஞர்களின் பெயர்களை வீதிப் பெயர்களாகச் சூட்டவும் விண்ணப்பிக்கப் போவதாக அவர் சொன்னார்.
– கி. ஜனார்த்தனன்
நன்றி : தமிழ் முரசு