சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 – நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
சி.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் சிதம்பரக் கவுண்டர்.பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி பயின்ற சுப்பிரமணியம் சென்னை மாகாணக் கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் படித்தார்.
அரசியல் வாழ்வு
இராசாசியின் வழிகாட்டுதலில் அரசியலும் நிர்வாகமும் பயின்றவர். 1952ஆம் ஆண்டு முதல் 1962 வரை தமிழ்நாடு (அப்போது மதராசு) மாநில அரசில் கல்வி, சட்டம் மற்றும் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் கூடுதலாக சட்டமன்ற மக்களவையில் ஆளும் கட்சித் தலைவராகவும் விளங்கினார். 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடாளுமன்றம் சென்று நடுவண் அரசில் எஃகு மற்றும் சுரங்க அமைச்சராகப் பங்கேற்றார். 1965ஆம் ஆண்டு உணவு அமைச்சராக இருந்து பசுமைப் புரட்சிக்கு வித்திட்டார். அப்போது இந்தி போராட்டத்திற்கு ஆதரவாக தமது பதவியை துறந்தார். 1969ஆம் ஆண்டு காங்கிரசு பிளவுபட்டபோது இந்திரா காந்தியுடன் இணைந்து பிரிவுபட்ட காங்கிரசின் தலைவராக விளங்கினார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட போது இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய திட்டக் கமிசனின் துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பின்னாளில் இந்திரா காங்கிரசிலிருந்து பிரிந்து தேவராஜ் அர்ஸ் தலைமையிலான காங்கிரசு பிளவுக்கட்சியில் சேர்ந்தார்.
1990ஆம் ஆண்டு மகாராட்டிர ஆளுனராகப் பொறுப்பேற்றார். அப்போதைய பிரதமரைக் குறித்த அவரது தனிப்பட்டக் கருத்து ஊடகங்களில் கசிந்து அதன் பின்னணியில் பதவி விலகினார்.
சாதனைகள்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றவர் சி. சுப்பிரமணியம். அரசியலைமைப்பு சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலைமைப்பு சட்டம் இயற்றுவதில் பங்காற்றினார்.
இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சராகப் பணி புரிந்தநேரம் அதிக மகசூல் தரும் விதைகளையும் உரங்களையும் ஈடுபடுத்துவதில் முனைப்பாகவிருந்து 1972ஆம் ஆண்டு மிகக் கூடுதலான கோதுமைவிளைச்சல் நிகழ்த்திய சாதனை பசுமைப் புரட்சி என புகழப்படுகிறது. அதுவரை பிற மேலைநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையிலிருந்து உணவு தன்னிறைவு எய்தியது குறித்து நோபல் பரிசு பெற்ற முனைவர் நார்மன் போர்லாக் அவரது முடிவெடுக்கும் வேகத்தாலும் அரசியல் பார்வைகளாலுமே இது சாத்தியமாயிற்று எனக் கூறுகிறார். 1964–67 ஆண்டுகளில் அவரது தீர்க்கதரிசனமிக்க அரசியல் உந்துதலே இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார்.
விருதுகள்
அவருக்கு நாட்டின் மிக உயரிய குடியியல் விருதான பாரத் ரத்னா 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
1960 களில் இந்தியாவில் நிகழ்ந்த பசுமைப் புரட்சிக்குக் காரணக் கர்த்தாவாக இருந்தவர் என்பதைப் பாராட்டி இவருக்கு வாணாள் சாதனையாளர் என்னும் விருதை டாக்டர் அம்ரிக் சிங் சீமா அறக்கட்டளை வழங்கியது. இவர் இறந்து 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2016 சூலை மாதம் இவ்விருது வழங்கப்பட்டது. அதனை இவரின் மகன் பெற்றுக் கொண்டார்.
அவரது புத்தகங்கள்
- War on Poverty.- வறுமை மீதான போர்
- The New Strategy in Indian Agriculture. – இந்திய விவசாயத்தில் ஓர் புதிய வழிமுறை
- Some Countries which I visited Round The World.- உலகில் நான் சென்ற சில நாடுகள்
- The India of My Dreams. – என் கனவு இந்தியா
- திருப்புமுனை (சுயசரிதம்), ஆங்கிலத்தில் Hand of Destiny என்ற பெயரில் வெளியானது
- தமிழால் முடியும் (தொகுப்பு நூல்)