ஈழத் தமிழர்களுக்கு சுண்ணாம்பு! காஷ்மீர் மக்களுக்கு வெண்ணையா? டெல்லியில் ஏமாற்றும் திமுக ஆர்ப்பாட்டம்!

இன்று (22.08.2019) டெல்லியில் திமுக தலைமையில் முன்னெடுக்கப்பட்டு, 14 கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் காஷ்மீருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொதுவாக, இன்றைய மத்திய அரசு அன்மையில் எடுக்கப்பட்ட காஷ்மீர் நிலையை நமது உலகத் தமிழர் பேரவை கண்டிப்பதோடு, காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி மேலும் அவர்களுக்கான உரிமைகள் கொடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. என்னடா, நமது உலகத் தமிழர் பேரவை – யின் நிலையைத் தானே இன்றைக்கு டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதற்கு ஆதரவளிப்பதுதானே நியாயம் என கேட்கத் தோன்றும்.

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும், இன்னொறு கண்ணுக்கு வெண்ணையை வைக்கும் காரியத்தை யார் செய்தாலும் நம்மாள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதை மேலும் விளக்கமாக சொன்னால் புரிந்து கொள்ள இயலும்.

2008-2009 இறுதிப் போரின் போது, அன்றாடம் ஈழத்தமிழர்கள் சிங்களப் படையால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும், 100 முதல் 250 தமிழர்கள் வரை கொத்து குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும், இரசாயன குண்டுகளாலும் கொல்லப்பட்டு கொண்டிருந்தனர். உண்ண உணவுவின்றி, மருத்துவமனைகளில் மருந்துகளின்றியும், தங்க இடமில்லாமல் பொட்டல் வெளிகளில் படுத்தும் லட்சக்கணக்கான மக்கள் துன்பப்பட்டனர். இறுதியில் மே 18, 2009 ஆண்டு ஒட்டு மொத்தமாக லட்சக்கணக்கான தமிழர்கள் ஒரே இரவு விடியும் முன், இனப்படுகொலை செய்யப்பட்டனர். இவைகளை காணொளி – காணொலி வாயிலாக அன்றாடம் எம் தமிழக மக்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கான ஆதரவினை தெரிவிக்க உயிரோடு இருந்த போது கெஞ்சினர். ஏதிலிகளாக ஏற்கெனவே வெளிநாடுகளில் தஞ்சமடைந்த பல ஈழத்தமிழர்கள், தமிழர் தாயகமாம் தமிழ் நாட்டில் உள்ள தலைமைகளிடத்தில் தொலைப் பேசி வாயிலாக காலில் விழாத குறையாக ஈழ மக்களை காப்பாற்ற வேண்டினர். இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக அன்றைய மைய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர்.

அப்போது, இந்திய மைய அரசு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. இவர்களது இனப்படுகொலைக்கு துணை வேண்டி, அன்றைய தமிழகத்தை ஆட்சி செய்த திமுக கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்து வந்தது. ஆனால், திமுக – வின் கட்சி முதல்வரோ, டெல்லி கொடுக்கும் அனைத்தையும் தனது குடும்ப நலனனுக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டு, தனது மகள் கனிமொழி சொல்லும் நபருக்கு மத்திய மந்திரி பதவியையும், தனது மகன் மு.க. அழகிரிக்கு மத்திய மந்திரி பதவியும், வாங்கி கொண்டார். அப்பொழுதே தமக்கு ஜால்ரா அடிக்கும் சிலருக்கு மத்திய மந்திரி பதவியும் வைத்துக் கொண்டு சாதித்துக் கொண்டாரே அல்லாமல், தமிழக மக்களுக்கோ, ஈழ மக்களுக்கோ யாதொன்று சொல்லும்படியாக செய்யவில்லை என்பதே உண்மை. மனித சங்கிலி என்றும், பயன்தராத சட்டமன்ற தீர்மானம் என்றும், ஈழ ஆதரவு கூட்டம் என்றும், உண்ணாநிலை என்று மூன்று மணி நேரம் இருந்து விட்டு, மத்திய அரசிடமிருந்து குண்டு போடுவது நின்று விட்டது என தவறான தகவல் சொல்லி உண்ணாநிலையை விலக்கிக் கொண்டு, ஒரு கூந்தலுக்கும் பயன்தராத ஈழ ஆதரவு நிலையை எடுத்ததைத் தவிர ஒன்றுமே உருப்படியாக செய்யவில்லை. ஒரு முறை நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் திரும்பப் பெறப்படும் என்று சொன்னாலும், பின்னர் அதை விலக்கிக் கொண்டார் அன்றைய முதல்வர். அன்று அவர் சொன்னபடி அந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தால், கண்டிப்பாக, இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும். ஈழப்போரும் நின்றிருக்கும். இனப்படுகொலையில் மக்கள் சாகாமல், தப்பியிருப்பர்.

காங்கிரஸ் ஆட்சி இந்திரா காந்தி தலைமையில் நடந்தபோதே, தமிழகத்தின் மீனவ நண்பர்கள் பயன்படுத்தி வந்த கச்சத்தீவையே இந்திரா, இலங்கைக்கு தாரை வார்த்த போதும், இங்கு கருணாநிதியே ஆட்சியில் இருந்தார். அப்போதே அதை தடுக்கத் தவறியவர்தான் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி. இன்று உச்ச நீதி மன்றத்தில் பெயருக்கு ஒரு வழக்கு ஒன்றை போட்டு விட்டு, நாங்கள் கச்சத்தீவை மீட்போம் என பொய்யான வாக்குறுதியினை கொடுத்து மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். ஆனால், இதை மக்கள் நம்பப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

மே 18, 2009 இனப்படுகொலை எல்லாம் முடிந்த பிறகு, ஈழ மக்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என சொல்லி, நம்மிடம் அன்று லண்டன் கருணை தூதுவன் என்ற அமைப்பால் அனுப்பப்பட்ட கேப்டன் அலி என்ற கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை மத்திய அரசிடம் சொல்லி, திமுக அன்று சுய விளம்பரம் செய்து கொண்டதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நாமும், தமிழக மக்களும் தெளிவாகத் தான் இருக்கிறோம்.

இப்படி ரத்தத்தின் ரத்தமான, ஈழத் தமிழருக்கு துரோகமிளைத்த திமுக, இன்று 3,000 கி.மி அப்பால் உள்ள காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை டெல்லியில் 14 கட்சியின் துணையோடு 100 மேற்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க நடத்தப்பட்டது, இஸ்லாமியரின் ஓட்டுக்காக அல்லாமல், வேறொன்றும் இருக்கவே முடியாது. இதை சிறுபான்மை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள்.

  • உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: