சமூக வலைதளத்தில் பாரதியார் ஓவிய கண்காட்சி: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டு

 

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சமுக வலைத்தளத்தில் பாரதியாரின் ஓவிய கண்காட்சி நடத்தும் கேரள சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன. குமுளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ரசாக். ஓவியரான இவர், கேரளாவில் கொரோனா 2ம் தீவிரமடைந்த கடந்த ஜூலை முதல் பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுதினத்தை முன்னிட்டு, அவர்களது ஓவியங்களை வரைந்து சமூக வலைத்தளத்தில் கண்காட்சியாக வெளியிட்டு வருகிறார்.

முதலாவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாளான ஜூலை 27ல், கலாமின் ஓவியங்களுடன் இவரது சமுக வலைத்தள கண்காட்சி நிகழ்ச்சி துவங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் 70வது பிறந்தநாளையொட்டி, சிறப்பு படங்களின் தொகுப்பு ஓவியங்களை வரைந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பாரதியாரின் பல்வேறு மாறுபட்ட படங்களை ஓவியமாக வரைந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட இந்த ஓவியங்களை கேரள வாழ் தமிழர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அப்துல்ரசாக் கூறுகையில், ‘‘ஒரு வருட கால கண்காட்சிக்கு தயாராகி வருகிறேன்.

ஓராண்டுக்குள் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக பிரபலங்களின் ஓவிய கண்காட்சியை துவங்க உள்ளேன்’’ என்று தெரிவித்தார். 

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: